

தஞ்சாவூர்: அரசுப் பேருந்து எல்இடி பலகையில் இந்தி மொழியில் வரவேற்பு வாசகம் இடம் பெற்றுள்ளது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழக தஞ்சாவூர் புறநகர் பேருந்து பணிமனையில் இருந்து திருச்சி-தஞ்சாவூர்- கும்பகோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரு அரசுப் பேருந்தின் உள்பகுதியில் உள்ள எல்இடி பலகையில் பயணிகளை வரவேற்கும் வகையில் நல்வரவு, வெல்கம் என தமிழ், ஆங்கில மொழிகளுடன், இந்தியிலும் வாசகம் இடம் பெற்றிருந்தது.
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக்கொள்கைதான் இருக்கும், 3-வது மொழிக்கு இடமில்லை என்று தமிழக அரசு உறுதியாக கூறி வரும் நிலையில், அரசுப் பேருந்தில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியும் இடம் பெற்றிருப்பது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தப் பேருந்தின் நடத்துநர், ஓட்டுநரிடம் கேட்டபோது, ‘‘அதுகுறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது’’ என்றனர். சமூக செயல்பாட்டாளரும், தமிழ் ஆர்வலருமான வி.ஜீவக்குமார் கூறும்போது, “தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை மீறி, அரசுப் பேருந்தில் இந்தி மொழியும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால் அரசுப் போக்குவரத்துக் கழகமும் மறைமுகமாக இந்தியை ஆதரிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மாற்ற நடவடிக்கை: அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘புதிதாக வாங்கப்பட்ட அரசுப் பேருந்துகள் வடமாநிலத்தில் இருந்து வந்துள்ளதால், அவற்றில் இந்தி மொழியில் வார்த்தைகள் இடம் பெற்றிருக்கலாம். அதை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.