

பழநி: பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலப்பதிவு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த பதிவுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட உயர்நிலைக் குழு இன்று பழநிக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். நேற்று முன்தினம் சார்பதிவாளர், மாவட்டப் பதிவாளர், நிலத்தை வாங்கியவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
மேலும், தலைமறைவாக உள்ள நிலத்தை விற்ற தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளைத்துரை மற்றும் சேதுபதி ஆகிய 3 பேரையும் போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடுகின்றனர்.
சட்டவிரோதமாக நிலத்தை விற்ற விழுப்புரத்தில் உள்ள முருகதாஸ் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். முருகதாஸ் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதோடு, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், நிலப்பதிவு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த பதிவுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட உயர்நிலை விசாரணைக் குழு இன்று பழநிக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் குழுவில் கூடுதல் பதிவுத் துறைத் தலைவர், உதவி பதிவுத் துறைத் தலைவர், மாவட்டப் பதிவாளர் ஆகிய 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பத்திரப் பதிவு நடந்த நாளில் பணியில் இருந்த சார் பதிவாளர், விடுப்பில் சென்ற சார்பதிவாளர், மாவட்டப் பதிவாளர், அலுவலகப் பணியாளர் உள்ளிட்டோரிடம் இந்தக் குழுவினர் விரிவான விசாரணை நடத்த உள்ளனர். இக்குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.