

சென்னை: தவெக பெண் தொண்டர்களை இழிவாகப் பேசியதாக பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக் கோரி, அரசியல் ஆலோசகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக தலைவரும், முதல்வருமான விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த தவெக பெண் தொண்டர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அரசியல் ஆலோசகரான பொன்ராஜுக்கு எதிராக கடந்த மார்ச் 26 அன்று தற்போது அமைச்சர்களாக பதவி வகி்க்கும் நிர்மல்குமார், கடலூர் ராஜ்குமார் ஆகியோர் போலீஸில் புகார் அளித்தனர்.
தவெக தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர், இந்த புகார்களின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும், கடலூர் போலீஸாரும் பொன்ராஜ் மீது வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி பொன்ராஜ் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக நடந்தது.
அப்போது பொன்ராஜ் தரப்பில், “மனுதாரர் உள்நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை. தேர்தலுக்கு முன்பாக அளிக்கப்பட்ட புகார்களுக்கு தேர்தலுக்குப் பிறகு புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குகளைப் பதிவு செய்துள்ளது” என வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில், “மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரின் செயலாளராகப் பணியாற்றிய மனுதாரர், தற்போது அரசியல் ஆலோசகர் என கூறிக்கொண்டு, இதுபோல பெண்களை இழிவுபடுத்தி பேசியிருக்கக் கூடாது.
அவரது இந்த பேச்சு ஒட்டுமொத்த பெண்களையும் பொதுப்படையாக குறிக்கும் வகையில் உள்ளது. அவரது அவதூறு பேச்சுகள் தொடர்பான வீடியோக்கள் இன்னும் இணையதளங்களில் இருந்து அகற்றப்படவில்லை. எனவே இந்த வழக்குகளை ரத்து செய்யக் கூடாது” என வாதிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரி பொன்ராஜ் தாக்கல் செய்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.