

சென்னை: சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி சென்னையில் கடந்த 2025 ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பொன்முடிக்கு எதிராக சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் வழக்கு தொடர்ந்தார்.
எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான சிறு வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், தனக்கு எதிரான இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொன்முடி மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற வாதம்:
பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ: மூடிய அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்து தொடர்பாக தனி நபர் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கை தாக்கல் செய்யும் முன்பாக அரசின் முன்அனுமதி பெறவில்லை. எனவே, வழக்கை விசாரணைக்கு ஏற்று சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
மனுதாரர் உமா ஆனந்தன் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.மகேஷ்: அப்போது அமைச்சராக இருந்த பொன்முடி தனது வெறுப்பு பேச்சின் ஆழம் என்ன என்பதை நன்கு அறிந்தே சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசியுள்ளார். அவரது பேச்சு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து பொன்முடிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.
ஆனால், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், ‘பொன்முடியின் இந்த பேச்சால் பொது அமைதிக்கு எந்த குந்தகமும் ஏற்படவில்லை’ என்று கூறி, அவருக்கு எதிரான புகார்களை போலீஸார் முடித்து வைத்தனர். இதனால்தான், பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் கொடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு வாதம் நடைபெற்றது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘இந்துக்களுக்கு எதிராக நாத்திகர்களை தூண்டிவிடும் வகையில் வெறுப்புப் பேச்சை பொன்முடி பேசியுள்ளது தெரிகிறது. அவர் மீதான வழக்கை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை’’ என கூறி பொன்முடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பொன்முடி மீதான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.