

சென்னை: திமுக தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளை பதிவிட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திமுக தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை இழிவுபடுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்கள் சிலர் ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவுகள் வெளியிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகளிடம் 17 புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், இந்த புகார்கள் மீதான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி திமுக சட்டப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக இன்று நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, ‘திமுக தலைவர்களை இழிவுபடுத்தி அவதூறாக சித்தரித்து சமூக வலைதளைங்களில் பதிவிடும் தவெக ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் மற்றும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நபர்களுக்கு எதிராக எத்தனை புகார்கள் அளித்தாலும், அவற்றின் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை’ எனக் குற்றம் சாட்டி சமூக வலைதளப் பதிவு தொடர்பான புகைப்படம் ஒன்றை நீதிபதியிடம் காண்பித்தார்.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதி, இதுபோன்ற பதிவுகளை பதிவிடும் நபர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். ‘இந்த பதிவுகளால் நிச்சயம் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். தங்களது தலைவர்களுக்கு எதிரான பதிவுகளைப் பார்க்கும் கட்சியினர் நிச்சயம் ஆத்திரமடையக் கூடும்’ என்றார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி, ‘திமுகவினருக்கு எதிரான ஒரு பதிவு தவிர மற்ற அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டு விட்டது. இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்’ என்றார்.
அப்போது எக்ஸ், பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இதுபோன்ற ஆபாச மற்றும் அவதூறு பதிவுகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வருவதாக விளக்கமளித்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இது தொடர்பாக விளக்கமளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.23-க்கு தள்ளி வைத்துள்ளார்.