அதிகாரிகள் தாமதத்துக்கு மாணவி பொறுப்பல்ல - மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: “சாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரி ஏற்படுத்திய தாமதத்துக்காக, மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவியை பொறுப்பாக்க முடியாது. மாணவி மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்” என மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த வி.கீர்த்தி விண்ணப்பித்தபோது, அவரிடம் இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, கிறிஸ்துவ சிறுபான்மை சான்று ஆகியவை இல்லாததால், அவை கிடைத்த பின்னர் சமர்ப்பிப்பதாக உத்தரவாதம் அளித்திருந்தார்.

கீர்த்திக்கு ஆகஸ்ட் 4-ல் கிறிஸ்துவ சிறுபான்மை சான்று, 11-ல் இருப்பிடச் சான்று, 15-ல் சாதிச் சான்று ஆகியவை கிடைத்த பின்னர், அவற்றை பதிவேற்றம் செய்தபோது, அதற்கான காலக்கெடு முடிவடைந்துவிட்டதாக கூறி, அவை ஏற்க மறுக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து கீர்த்தி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு ஆகஸ்ட் 12 ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், சாதிச் சான்று ஆகஸ்ட் 15-ம் தேதி தான் வழங்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி, அந்த தாமதத்துக்கு மாணவியை பொறுப்பாக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

சான்றிதழை வழங்கும் அதிகாரியால் ஏற்பட்ட தாமதத்திற்காக மனுதாரரை குறை கூற முடியாது என்றும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் சான்றிதழை சமர்ப்பிக்காததை மட்டுமே காரணமாகக் கொண்டு விண்ணப்பத்தை நிராகரித்ததை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, தகுதி, தரவரிசை மற்றும் இடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு உட்பட்டு, கீர்த்தியை கலந்தாய்வு நடைமுறையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துவிட்டால், அடுத்தடுத்த சுற்றுகளில் அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்
தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in