திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஐகோர்ட் புதிய உத்தரவு - நீதிபதி கூறியது என்ன?
மதுரை: திருப்பரங்குன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடையாணையை ரத்து செய்தும், நீதிமன்ற உத்தரவுபடி தீபத் தூணில் தீபம் ஏற்றவும், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் மதுரை ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தடை கோரிய மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வியாழக்கிழமை மாலை விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், “தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை முடிந்ததும் அவமதிப்பு மனுவை விசாரிக்கலாம்” எனக் கூறப்பட்டது. அதற்கு நீதிபதி, “நீதிமன்ற உத்தரவால் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாறாக அரசு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
அரசு தரப்பில், “நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புங்கள். பதிலளிக்க 4 வாரம் கால அவகாசம் தர வேண்டும்” எனக் கூறப்பட்டது. தொடர்ந்து நீதிபதி, “கோயில் தரப்பு அரசு வழக்கறிஞரும், கோயில் செயல் அலுவலரும் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக நடந்திருக்கலாம்” என்றார்.
அரசுத் தரப்பில், “நாங்களும் பக்திமான்கள்தான். விசாரணையை ஒத்திவைக்க வேண்டும். உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால் அரசின் கோரிக்கையை நீதிபதி கருத்தில் கொண்டு, வழக்கை ஒத்திவைக்க வேண்டும்” என்றார்.
பின்னர் நீதிபதி, “கோயில் செயல் அலுவலரை உடனடியாக காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும். அவருக்கு நீதிமன்றத்தின் மதிப்பு புரிய வேண்டும்” என்றார். கோயில் செயல் அலுவலர் ஆஜராகாததால் “அவர் ஆஜராவாரா? இல்லையா?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, “காவல் ஆணையரும், மாவட்ட ஆட்சியரும் காணொலி வாயிலாக உடனடியாக ஆஜராக வேண்டும். காவல் ஆணையர் சீருடையில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆஜராக வேண்டும்” என்றார்.
அரசுத் தரப்பில், “அதிகாரிகள் 5 நிமிடங்களில் ஆஜராக வேண்டும் என்றால் எப்படி?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நீதிபதி, “செயல் அலுவலரின் நடவடிக்கையால் ஆட்சியரையும், காவல் ஆணையரையும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 05.30-க்குள் மணிக்கு ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும். அதற்கு தயங்க மாட்டேன்” என்றார்.
பின்னர் மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி, “நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்களா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு ஆணையர், “திருப்பரங்குன்றத்தில் பேரிகார்டுகள் அமைத்து 03.30 மணி முதல் நடவடிக்கை எடுத்து வந்தோம். கூட்டம் அதிகமாகி பிரச்சினை எழுந்ததால், மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.
பின்னர் நீதிபதி, “144 தடை உத்தரவு பிறப்பிக்க எந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது?” என்றார். அதற்கு, “சுமார் 05.45 மணியளவில் பரிந்துரை அனுப்பப்பட்டது, அந்த பரிந்துரை அடிப்படையில் 06.10 மணியளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எங்களது நோக்கம் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது, மதிக்கக் கூடாது என்பதல்ல. பதற்றமான சூழலை கருத்தில் கொண்டே 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பெரிய நடவடிக்கை தடுக்கப்பட்டது” என ஆணையர் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, “பெரியளவில் பிரச்சினை வராதது மக்களின் நன்னடத்தையால் தான். அதற்கு நீங்கள் பெருமைப்பட வேண்டாம்?” என்றார். அரசுத் தரப்பில், “உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு எடுக்கப்படும் என்பதாலேயே, அதனை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மறுநாள் விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதால் சூழலை நிர்வகிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எது எப்படியாயினும் காவல் துறை ஆணையரை பாராட்ட வேண்டும். பெரிய காயங்கள், இழப்புகளின்றி சூழலை நிர்வகித்தார்” எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதி, “தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த டிசம்பர் 1-ல் உத்தரவிடப்பட்டது. அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று தொடரப்பட்டது. அதில் மனுதாரர் தீபமேற்ற உத்தரவிடப்பட்டது. மனுதாரர், வழக்கறிஞர்கள் சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் மலைக்கு மேலே செல்ல முயன்றபோது மேலே செல்ல விடாமல் மதுரை காவல் ஆணையர் தடுத்துள்ளார். அவர்களிடம், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், மேலே செல்ல அனுமதிக்க இயலாது எனக் கூறியுள்ளார் அதாவது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற இயலாது எனக் கூறியுள்ளார். இதனால் மனுதாரர்களும், சிஐஎஸ்எப் வீரர்களும் திரும்பிவிட்டனர். மனுதாரர்களால் தீபத்தை ஏற்ற இயலவில்லை.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முதன்மை அமர்வு தள்ளுபடி செய்து, விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் மாவட்ட ஆட்சியரின் 144 தடை உத்தரவு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை காவல் ஆணையர் போதுமான காவல் பாதுகாப்பு வழங்கியிருந்தால், பிரச்சினை பெரிதாகியிருக்காது. ஆணையர் நீதிமன்றத்தை விட ஆட்சியர் பெரியவர் என எண்ணியுள்ளார். இதனால் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவால், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த இயலவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
இதனால் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை இன்று நிறைவேற்ற காவல் துறை ஆணையர் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும். காவல் துறை பாதுகாப்புடன் மனுதாரர் தீபத் தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை (வெள்ளிக்கிழமை) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.
