

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது எவ்வாறு என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது நூலகங்களுக்கான புத்தக கொள்முதல் முறைகேடு வழக்கின் நீதிமன்ற அவமதிப்பு மனு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், புத்தகங்கள் பொது, சிறப்பு என இரு வகைகளாக பிரிக்கப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. பெரியார் அறிவுலகத்துக்கு சிறப்பு வகையில் புத்தகம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பொது கொள்முதலுக்கு பொருந்தும் அதே கொள்கைகள், நிபந்தனைகள் சிறப்பு கொள்முதலுக்கும் பின்பற்றப்பட்டதா?
மதுரை கலைஞர் நூலகம் மற்றும் பெரியார் அறிவுலகம் ஆகியவற்றிற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ய எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது? மதுரை கலைஞர் நூலகம் (ஜனவரி முதல் டிசம்பர் 2025 வரை) மற்றும் பெரியார் அறிவுலகத்துக்கு மொத்தம் எத்தனை புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டன?
வெளிப்படைத்தன்மை விதிகளின்படி புத்தகங்கள் இரு கட்டங்களாகக் கொள்முதல் செய்யப்பட்டபோது, நிபுணர் குழுவால் எத்தனை புத்தகங்கள் நிராகரிக்கப்பட்டன? பெரியார் அறிவுலகத்திற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களில் நிபுணர் குழுவால் நிராகரிக்கப்பட்ட புத்தகங்கள் எத்தனை? 137 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவால் எத்தனை புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டன? இந்தப் பணிக்காக எவ்வளவு காலம் வழங்கப்பட்டது? இறுதியில் எத்தனை புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டன?
'அகல்விளக்கு' நிறுவனத்திடம் 2300 புத்தகங்களில் 1700 தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 'அகல்விளக்கு' நிறுவனத்தின் அந்த 600 புத்தகத் தலைப்புகளை நிராகரித்தது யார், எந்தக் கட்டத்தில் நிராகரிக்கப்பட்டன? அதற்கான காரணம் என்ன? இது குறித்த கூட்டத்தின் செயல்முறை அறிக்கை நகல் தாக்கல் செய்ய வேண்டும்.
ஒரு பதிப்பகத்தின் 600 புத்தகத் தலைப்புகளை நிராகரிக்க முடிந்த நிலையில், மீதமுள்ள 1700 புத்தகங்களைத் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கவும் கொள்முதல் செய்யவும் அதிகாரிகள் முடிவெடுத்தனர்? பெரியார் அறிவுலகத்திற்காக எத்தனை ஆங்கிலப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டன? அவை நேரடியாகப் பதிப்பகங்களிடமிருந்து வாங்கப்பட்டனவா அல்லது புத்தக விற்பனையாளர்களிடமிருந்து வாங்கப்பட்டனவா? ஆங்கிலப் புத்தகங்களுக்கும் தமிழ் புத்தகங்களுக்கும் தனித்தனியாக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது? ஒதுக்கப்பட்ட முழு நிதியும் பயன்படுத்தப்பட்டுவிட்டதா?
கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட நூலகர்களின் பணிகளை, பொது நூலக இயக்குநரும் பள்ளி கல்வித்துறைச் செயலாளரும் கண்காணித்தார்களா? அவர்கள் கோப்புகளை ஆய்வு செய்தார்களா? துறைச் செயலாளர் ஏதேனும் எழுத்துப்பூர்வமான அறிவுறுத்தல்களை வழங்கினாரா?
நிபுணர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டும், கொள்முதல் செய்யப்படாத புத்தகங்கள் எத்தனை? அதற்கான காரணங்கள் என்ன? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க அரசு தலைமை வழக்கறிஞர் கூடுதல் அவகாசம் கேட்டார். மேலும் அவர் முறைகேட்டில் தொடர்புடைய அனைவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதிடுகையில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அகல்விளக்கு நிறுவன உரிமையாளர் மோகன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராகச் சேர்க்கப்பட்டுள்ளார். எதிர்கால கொள்முதல் நடைமுறைகளைச் சீரமைப்பது குறித்து இந்த நீதிமன்றம் ஏதேனும் ஆலோசனைகளை வழங்கினால் அவற்றை அரசு நிச்சயமாகப் பரிசீலிக்கும் என்றார்.
'கிழக்கு பதிப்பகம்' பத்ரிநாராயணன் சேஷாத்ரி மற்றும் பெயர்களை வெளியிட விரும்பாத இருவர், புத்தகம் கொள்முதல் தொடர்பாக பல்வேறு விபரங்களையும், குறிப்புகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: புத்தகம் கொள்முதல் தொடர்பாக ஏற்கனவே இருந்த வழிகாட்டுதல்கள் தற்போது செயலற்ற நிலையில் உள்ளன. எனவே புதிய நடைமுறையை உருவாக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. புத்தகக் கொள்முதலில் மீண்டும் ஒரு முறைகேடு நிகழாத வண்ணம் முறையான அரசு ஆணை வெளியிட அதிக காலம் தேவைப்படாது. இந்த கட்டாய நடைமுறை அமலுக்கு வந்தவுடன் நீதிமன்ற அவமதிப்பு முடிக்கப்படும்.
தமிழகத்தில் நூலக வரி வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை முறையாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய விரும்புகிறோம். அந்தத் தொகை எவ்வாறு செலவிடப்பட்டது என்பதையும் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். அதிகாரிகள் பதில் மனுவில் அந்த விபரங்களையும் அளிக்க வேண்டும்.
இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி சிலர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் அடுத்த விசாரணையின் போது பரிசீலிக்கப்படும். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது எவ்வாறு என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி, அடுத்த விசாரணையின் போது அரசு ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக ஒரு 'வெள்ளை அறிக்கை' தாக்கல் செய்தால் பொருத்தமானதாக இருக்கும்.
இந்த முறைகேடு தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இதனால் நிர்வாக அமைப்பின் மீதான அவர்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டின் இரு பெரும் ஆளுமைகளான பெரியார், அண்ணா ஆகியோர் நூலகங்களின் முக்கியத்துவத்தையும் பொது வாசிப்பின் அவசியத்தையும் நமக்கு உணர்த்தியுள்ளனர்.
போலி பதிப்பாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்காதது வரை எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது தெரியவராது.
இக்குற்றம் நடைபெற்ற முறையை வெளிக்கொண்டு வர வேண்டியது அவசியம். முந்தைய ஊழல்களைப் போல் இல்லாமல் இந்த முறைகேட்டை செயல்படுத்திய விதம் முற்றிலும் மாறுபட்டது. முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் செயல்முறைகள் தீய நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த விசாரணையின் போது இது குறித்த தெளிவான சித்திரம் கிடைக்கும் என நம்புகிறோம். விசாரணை நவ. 20-க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.