பைக் டாக்ஸியை அனுமதிக்கலாமா? - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

பைக் டாக்ஸியை அனுமதிக்கலாமா? - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவையை முறைப்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த நவீன் குமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ரேபிட்டோ, ஓலா, ஊபர் போன்ற பைக் டாக்ஸி சேவைகள் அதிகரித்துள்ளன. இந்தச் சேவை பலருக்கும் பயனளிக்கும் வகையில் இருந்தாலும் சேவைகளை ஒழுங்குபடுத்த தனி திட்டமோ, விதிகளோ இல்லை.

ஆட்டோ, கார்களை போல் பைக் டாக்ஸி சேவை தனித்து இயங்க முடியாது. இது சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனங்களைச் சார்ந்துள்ளது. அந்த நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடு இல்லாமல் தங்கள் டிஜிட்டல் தளங்களை இயக்குகின்றன. அதே நேரத்தில் விதிமீறல் தொடர்பாக அபராதம் விதிப்பது, வாகனங்களைப் பறிமுதல் செய்வது, குற்ற வழக்குப் பதிவு செய்யும்போது பைக் ஓட்டுநர்கள் தண்டிக்கப்படுகின்றனர்.

எனவே, பைக் டாக்ஸிகளை ஒழுங்குபடுத்த ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கவும், சட்டப்படி உரிமம் வழங்கி பைக் டாக்ஸி சேவையை தொடர்வதற்கான விதிகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். அதுவரை பைக் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. ‘இரு சக்கர வாகனங்களை எவ்வாறு பைக் டாக்ஸி போல் அனுமதிக்கலாமா? அரசின் நிலைப்பாடு என்ன?’ என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

பைக் டாக்ஸியை அனுமதிக்கலாமா? - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
“மேட்டூர் அணை நிலவரம் நேற்றுதான் தெரியுமா?” - முதல்வர் விஜய் மீது நயினார் நாகேந்திரன் சாடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in