சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம்: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம்: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: தெலங்கானா மாநிலம் போல தமிழகத்தில் சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: சிறைத்தண்டனை என்பது குற்றம் செய்த நபருக்கு மட்டுமே விதிக்கப்படும் தண்டனையாக இருந்தாலும், நடைமுறையில் அவரது மனைவி, குழந்தைகள், பெற்றோர் உள்ளிட்ட குற்றமற்ற குடும்ப உறுப்பினர்களும் கடுமையான பொருளாதார, சமூக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள்.

குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபர் சிறையில் அடைக்கப்படும்போது, கல்வி, மருத்துவம், உணவு, வீட்டு வாடகை போன்ற அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவாகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தென் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் சிறைவாசிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுடன் சமூகப் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார நிலையை ஆய்வு செய்ததில், பல குழந்தைகள் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தியதும், பெண்கள் கடுமையான கடன் சுமையால் கூலி வேலைக்கு சென்றதும், வயதான பெற்றோர் பேரக் குழந்தைகளை வளர்க்கும் அவலமாக அமைந்துள்ளது.

இதனால், குற்றமற்ற குடும்பங்களும் தண்டனையை அனுபவிக்கின்றன.மேலும், தமிழக சிறைத்துறையில் நெசவு, தையல், காலணி தயாரிப்பு, பேக்கரி, தச்சு வேலை, விவசாயம், செங்கல் தயாரிப்பு, புத்தக பைண்டிங், சோப்பு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. மேலும் சிறைகளில் ஃப்ரீடம் மற்றும் ப்ரிசன் பஜார் (சிறை சந்தை) என்ற பெயர்களில் செயல்படும் விற்பனை மையங்கள் மூலமும் வருவாய் ஈட்டப்பட்டு, அந்த லாபம் அரசுக்கும், சிறைத்துறை நல நிதிக்கும், சிறைத்துறை உற்பத்தி நிதிக்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது.

தெலங்கானா மாநிலத்தில் இந்த நிதியில் சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தை பின்பற்றி தமிழகத்தில், சிறைவாசிகள் குடும்பத்தினருக்கு, வட்டியில்லா நிதியுதவி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

மனுவை நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமர்வு இன்று விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், மனு குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளார், சிறைத்துறை டிஜிபி ஆகியோர் நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம்: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
சாட்சிகளின் சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை: கரூர் நெரிசல் வழக்கு மேற்பார்வை குழுவுக்கு திமுக கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in