டாஸ்மாக் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் டெண்டர் வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

டாஸ்மாக் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் டெண்டர் வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்பப் பெற ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை நிறுவுவதற்கான டெண்டரை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்கப்படும் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்காக, ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை நிறுவி, செயல்படுத்துவதற்காக, கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி டெண்டர் கோரப்பட்டது.

இந்த டெண்டருக்கு தடை விதிக்கக் கோரி, விழுப்புரம் மாவட்டம், மேலகொண்டூரைச் சேர்ந்த குமரகுரு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘மாநிலம் முழுவதற்கும் சேர்த்து ஒரே நிறுவனத்தை இப்பணிக்கு நியமிக்க இருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும், பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்றும் டெண்டர் படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பல ஆண்டுகளாக காலி பாட்டில்களை சேகரிக்கும் பணியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் நேரடியாக பாதிக்கப்படுவர். ஒரே நிறுவனத்தை நியமிப்பதற்கு பதில், மாவட்ட வாரியாக காலி பாட்டில்களை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோரும், இந்த டெண்டரில் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும்.

இந்த டெண்டரை ரத்து செய்து, மாவட்ட அளவில் காலி பாட்டில்கள் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோரும் பங்கேற்கும் வகையில் டெண்டர் நிபந்தனைகளை திருத்த உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர், தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

டாஸ்மாக் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் டெண்டர் வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
“மின் வாரிய அலுவலகத்தில் முதல்வர் செய்தது ரிவ்யூ அல்ல... ரீல்ஸ்!” - ஸ்டாலின் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in