

சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென, அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறைக்கு கெடு விதி்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, வழக்கறிஞர் பி. ஜெகந்நாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் ஏக்கர் சொத்துக்களில், 550 ஏக்கருக்கும் மேற்பட்ட சொத்துக்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
எனவே, கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை வருவாய்துறை அதிகாரிகள் மூலமாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத் துறை மற்றும் தமிழக அரசின் வருவாய்த் துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும்’ என, கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், 2022 மே மாதத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. ஆனால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை எனக் கூறி, வழக்கறிஞர் ஜெகந்நாத் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இ்ந்த அவமதிப்பு வழக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. இன்னும் அறிக்கை தாக்கல் செய்யாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகள் அதிருப்தி: அதற்கு, அறநிலையத் துறை தரப்பி்ல் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர். அருண் நடராஜன், கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 125 ஏக்கர் நிலத்தை 233 பேர் ஆக்கிரமித்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை அந்த நிலத்தில் இருந்து சட்ட ரீதியாக அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிலர் வாடகை செலுத்த முன் வந்துள்ளனர். எனவே, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய 3 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என, கோரினார்.
இதையடுத்து நீதிபதிகள், அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கும் போது, கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை அபகரித்து ஆண்டுக்கணக்கில் அனுபவித்து வரும் ஆக்கிரமிப்பாளர்களை எப்படி வரன்முறைப்படுத்த முடியும் என அதிருப்தி தெரிவித்தனர்.
பின்னர், இந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென அறநிலையத் துறைக்கும், வருவாய் துறையினருக்கும் கெடு விதித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.