சென்னை: சென்னை கே.கே.நகரில் அரசியல் கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை கே.கே.நகர் குடியிருப்போர் நலச் சங்க பொதுச் செயலாளரான ரவிசங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ``கே.கே.நகர் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளது.
கே.கே.நகர் பகுதியில் அரசியல் கட்சியினர் உரிய அனுமதியின்றி பொதுக்கூட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவதால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், அலுவலகங்களுக்கு செல்வோர், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அதிக ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் குடியிருப்பாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
எனவே கே.கே.நகர் பகுதியில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும்'' எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு கடந்த 2024-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தை சுட்டிக்காட்டி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் எங்கு, எப்போது பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதனால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.