

மதுரை: பத்திரப் பதிவின் போது முந்தைய அசல் ஆவணங்களை சமர்பிக்கும் வகையில் பதிவுச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் குமார் துகார் உள்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் போலி ஆவண பதிவுகளை தடுக்க மாநில அரசு பல்வேறு சட்ட, நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறது. போலி பத்திரப் பதிவுகளை தடுக்கும் நோக்கில் 1908-ம் ஆண்டின் பதிவுச் சட்டத்தில் 34-சி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
இதன்படி, சொத்து விற்பனையாளர்கள் முந்தைய அசல் ஆவணங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், சொத்தை விற்கும் நபர், அந்த சொத்திற்கான முந்தைய அசல் ஆவணத்தையும், 10 நாட்களுக்குள் பெறப்பட்ட வில்லங்கச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். முந்தைய அசல் ஆவணம் தொலைந்துவிட்டால், காவல் துறையின் தேடலில் கிடைக்காத சான்றிதழ் மற்றும் நாளிதழில் கொடுக்கப்பட்ட விளம்பர நகல் சமர்ப்பிக்க வேண்டும். பூர்வீக சொத்தாக இருந்தால் பட்டா சமர்ப்பிக்கப்பட வேண்டும். விற்கப்படும் சொத்து மீது ஏற்கனவே கடன் இருந்தால், அடமானம் வைத்தவரிடம் இருந்து ‘தடையில்லாச் சான்று’ வழங்க வேண்டும்.
இப்புதிய பிரிவுக்கு குடியரசுத் தலைவர் 23.01.2026-ல் ஒப்புதல் வழங்கியுள்ளார். இருப்பினும் சட்டப்பிரிவு தொடர்பாக சார் பதிவாளர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால் அசல் ஆவணங்கள் இல்லாமல் சொத்து ஆவணங்களை பதிவு செய்ய சார் பதிவாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். பத்திரம் பதிவு செய்ய மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். எனவே பதிவுச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 34-சி பிரிவு செல்லாது என அறிவித்து ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு: தமிழ்நாடு பதிவுச்சட்டத்திருத்தத்தின் பிரிவு 34 (சி), ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட விதி 55-ஏ-ஐ மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியை தவிர வேறில்லை என்பதே எங்கள் கருத்தாகும். மேலும் சட்டமன்றம் நீதிசார்ந்த அதிகாரங்களை நிர்வாகத்துறையிடம் வழங்க முடியாது. இத்தகைய செயல்பாடு அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை மீறுவதோடு அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவையும் மீறுவதாகும்.
அரசியலமைப்பின் 300-ஏ பிரிவின் கீழ் ஒருவரின் சொத்துரிமைக்கு தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாக சட்டத்திருத்தம் உள்ளது. இது, சொத்து மாற்றச் சட்டம்' மற்றும் 'ஒப்பந்தச் சட்டம்' போன்ற முக்கிய சட்டங்களின் விதிகளை மீறுவதுடன், அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை மீறுவதாகவும், தன்னிச்சையானதாகவும் உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு இந்தச் சட்டத்திருத்தம் அதிகார வரம்பை மீறியது என அறிவிக்கிறோம். பதிவுச்சட்டத்தின் 34-சி பிரிவை சேர்த்து பிறப்பித்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்கிறோம்.
வில்லங்க சான்றிதழ் கோரும் போது சொத்தின் தற்போதைய அல்லது முந்தைய வில்லங்கங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட வேண்டும். வில்லங்க சான்றிதழில் நில அளவை எண், கதவு எண் ஆகியவற்றையும் வழங்குமாறு பதிவுத் துறைத் தலைவருக்கு உத்தரவிடுகிறோம். இப்பணி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் உடனடியாகத் தொடங்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் படிப்படியாக அமல்படுத்தப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கையால் அனைத்துப் பதிவுகளும் வில்லங்கப் பதிவேடுகளில் சரியாகப் பிரதிபலிக்கப்படும். இதனால் போலி பதிவு தொடர்பான அரசின் அச்சம் தீர்க்கப்படுவதுடன், பொதுமக்கள் பதிவுக்கு முன்பு முழுமையான ஆய்வை மேற்கொள்ளவும் வழிவகுக்கும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.