

சென்னை: ஒரு ஓட்டு வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை தோற்கடித்த திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரிக்கவுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சரான கே.ஆர்.பெரியகருப்பன் 83,364 வாக்குகள் பெற்றார். தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகள் பெற்று ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதையடுத்து மறுவாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என்றும், தனது தொகுதிக்கான ஒரு வாக்கு தொகுதி மாற்றி வேலூர் அருகேயுள்ள திருப்பத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வாக்கை மீட்டு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கக்கூடாது என தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எல்.விக்டோரியா கெளரி, என்.செந்தில்குமார் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று காலை பிறப்பித்த தீர்ப்பில், ”ஒரு தபால் வாக்கை அதே பெயர் கொண்ட வேறு ஒரு தொகுதிக்கு மாற்றி அனுப்பி விட்டதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற சிக்கலான சூழல்களில் சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற நெறிமுறைகள் தேர்தல் ஆணைய விதிமுறைகளில் தெளிவுபடுத்தப்படவில்லை. இதை ஒரு காரணமாக சுட்டிக்காட்டி தேர்தல் வழக்கு தொடரவும் சட்டத்தில் இடமில்லை. ஏனெனில், வாக்குகளை முறையற்ற வகையில் ஏற்றுக் கொண்டது அல்லது நிராகரித்தது, முறைகேடுகளில் ஈடுபடுவது, உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றாதது போன்ற செயல்களை எதிர்த்துத்தான் தேர்தல் வழக்கு தொடர முடியும்.
இருவருக்கும் இடையே ஒரு ஓட்டுதான் வித்தியாசம் என்பதால் இந்த வழக்கை முக்கியமற்றதாகவும் கருத முடியாது. எனவே தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நாளை (இன்று) நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
ஒரு அரசு நீடிப்பதும், கவிழ்வதும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் என்பதாலும், தற்போதைய சூழலில் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி அதில் பங்கேற்பதை, நடுநிலைமையை பாதுகாக்கும் வகையில் நாங்கள் அனுமதிக்க முடியாது. அதேநேரம் அவரது வெற்றி செல்லாது என்றும் அறிவிக்க முடியாது. மறுஎண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் நாங்கள் தற்போது உத்தரவு பிறப்பிக்கவில்லை.
தேர்தல் புனிதத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தல் அதிகாரிகளின் செயல் அதிருப்தி அளிக்கிறது. எனவே இந்த வழக்கு தொடர்பான வாக்கு எண்ணிக்கை ஆதாரங்கள், அதேபோல ஒரு வாக்கு தொகுதி மாற்றி அனுப்பி வைக்கப்பட்டிருந்தால் அதை அடையாளம் கண்டு சீலிட்டு பாதுகாக்க வேண்டும். தபால் வாக்கு தொடர்பான எண்ணிக்கை, நிராகரிப்பு தொடர்பான வீடியோ பதிவுகளையும் பாதுகாக்க வேண்டும். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம், சீனிவாச சேதுபதி ஆகியோர் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
இதனிடையே சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக சீனிவாச சேதுபதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி முறையீடு செய்தார். அதையேற்ற நீதிபதிகள், இன்று விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்போது தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டுமெனக்கோரி பெரியகருப்பன் தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.