

போக்சோ வழக்கில் கைதான கிரானைட் தொழிலதிபர் வீரமணி
சென்னை: ஜெம் வீரமணி மீதான வழக்கில் தொடர்புடைய வீடியோக்களை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீடியோவை வெளியிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த துளிர் அறக்கட்டளை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‘குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்த இந்தச் சம்பவங்கள் கடந்த 2025-ஆம் ஆண்டு கிடைத்த ஒரு பென் டிரைவின் மூலம் தெரியவந்தது. இருப்பினும் இந்த வழக்கை கடந்த 2026-ஆம் ஆண்டு போலீஸார் முடித்து அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால், அந்த அறிக்கையை ஏற்க மறுத்த போக்சோ சிறப்பு நீதிமன்றம் வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்டில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீடியோ காட்சிகளை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் துறைக்கு புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த புகாரை பரிசீலித்து, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து இந்த காட்சிகளை நீக்க வேண்டும். காட்சிகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடியோக்களை ஒளிபரப்ப அனைத்து ஊடகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் போக்சோ சட்ட விதிகளையும், தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளையும் மீறி, ஊடகங்கள் இந்த வழக்கு தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு விவாதங்களை நடத்தி வருவதாகவும், அந்த ஊடக நிறுவனங்களுக்கு வீடியோக்கள் கிடைத்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில், இந்த வழக்கை அரசு தீவிரமாக கருதி விசாரித்து வருவதாகவும், மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை பாதிக்கப்பட்ட 4 சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், வீடியோக்கள் வெளியான சமூக வலைதளப் பக்கங்களை முடக்கக் கோரி கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வீடியோக்கள் வெளியானது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஊடக நிறுவனங்கள் தரப்பில், மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மை தெரியாமல், ஊடகங்கள் செயல்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட யாரும் புகாரளிக்க முன்வரமாட்டார்கள் என தெரிவித்தார். மேலும், மும்பை தாக்குதல் சம்பவத்தின்போது, காவல் துறையின் நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ததால், பயங்கரவாதிகள் தங்கள் அணுகுமுறையை மாற்றி செயல்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடக விசாரணை நடத்துவதற்கான உரிமை அல்ல என தெரிவித்தார்.
பின்னர், இந்த வழக்கு தொடர்பாக வீடியோக்களை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக விவாதங்கள் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
மேலும் வழக்கின் முன்னேற்றம் குறித்து மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக வாரம் ஒருமுறை பத்திரிக்கை செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய மாநில அரசுகள், காவல் துறை, வீடியோவை வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.