

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: தமிழ்நாடு மனமகிழ் மன்ற உரிமையாளர் சங்கத் தலைவர் வீரபாண்டியன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் சங்க உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுவதும் அரசிடம் முறையாக எப்எல்-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களை நடத்தி வருகிறோம். மன்ற உறுப்பினர்களுக்கு மது விற்பனை செய்து வருகிறோம்.
மனமகிழ் மன்றங்களின் நடவடிக்கையை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். இந்நிலையில் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள், ஆளும் கட்சி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள், யூடியூப் செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில் மனமகிழ் மன்றங்களுக்குள் அத்துமீறி நுழைந்து செல்போனில் வீடியோ பதிவு செய்து சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதாக சித்தரித்து சமூகவலை தளங்களில் வீடியோக்களை பதிவேற்றுகின்றனர்.
இதில் மனமகிழ் மன்றங்களில் மது அருந்தும் உறுப்பினர்களின் அடையாளம் தெரியுமாறு ‘ரீல்ஸ்’கள் எடுத்து பரப்புகின்றனர். மது அருந்துவோர், ஊழியர்களுடன் தகராறு செய்கின்றனர். வீடியோக்களை காட்டி மனமகிழ் மன்ற உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி,திருச்சி மாவட்டங்களில் மனமகிழ் மன்றங்களில், ஆளும் கட்சி நிர்வாகிகள் ஆய்வு என்ற பெயரில் நுழைந்து தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் தொழில்பாதிக்கப்படுகிறது. எனவே மன மகிழ் மன்றங்களில் உரிமைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையருக்கு உத்தரவிடவேண்டும்என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதி சரவணன் விசாரித்தார். அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. பின்னர் நீதிபதி, மனமகிழ் மன்றங்களில் துறை அதிகாரிகள் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். யூடியூபர்கள், அரசியல் கட்சியினர், தொடர்பில்லாத நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து வீடியோ பதிவு செய்யத் தடை விதிக்கப்படுகிறது. இதை அதிகாரிகள் உறுதிப்படுத்த உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.