அமைச்சர்கள் ஆதவ், நிர்மல் குமார் மீது அவதூறு வழக்கு தொடர திமுகவுக்கு ஐகோர்ட் அனுமதி

அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்  குமார் மீது அவதூறு வழக்கு தொடர திமுகவுக்கு ஐகோர்ட் அனுமதி
Updated on: 
2 min read

சென்னை: போக்சோ வழக்கில் கைதான வீரமணி வழக்கில் தங்களை இணைத்துப் பேசிய அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்ய திமுகவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்காமல் முந்தைய திமுக அரசு தப்பிக்க விட்டுவிட்டதாக தவெகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேட்டி அளித்திருந்தனர். அதேபோல, தவெக ஐ.டி. விங்கும், திமுக அரசுக்கு எதிராக குற்றம்சாட்டி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது.

இது திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில் திமுக அரசு மீது குற்றம்சாட்டி கருத்துக்களை தெரிவிக்க அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக ஐ.டி. விங் ஆகிய தரப்புக்கு தடை விதிக்கக் கோரி, திமுக சார்பில் அதன் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கும்படி அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தொழில்நுட்ப பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

ஜெம் வீரமணிக்கு எதிராக 2025-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி புகார் வந்தநிலையில், மறுநாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், எந்த தலையீடும் இல்லாமல், எந்த தாமதமும் செய்யப்படாமல் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உண்மை நிலைக்கு மாறாக திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் ஐ.டி. பிரிவு அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திமுக மீது குற்றம்சாட்டி அமைச்சர்கள் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட பதிவுகள் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர்கள் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமென்றால் முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கயிருக்க வேண்டுமெனவும், அவ்வாறு நோட்டீஸ் வழங்காமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிட்டார்.

அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், அமைச்சர்கள் என்ற முறையில் அல்லாமல் தனி நபர்கள் என்ற முறையிலேயே அமைச்சர்கள் இருவரும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, கோவிந்தராஜன் திலகவதி, போக்சோ வழக்கில் கைதான வீரமணி வழக்கில் தங்களை இணைத்து பேசியதாக அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு எதிராக அவதூறு தாக்கல் செய்ய திமுகவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்  குமார் மீது அவதூறு வழக்கு தொடர திமுகவுக்கு ஐகோர்ட் அனுமதி
புதிய தலைமைச் செயலக விவகாரத்தில் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in