டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
Updated on
2 min read

சென்னை: அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்றும், இதனால் டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை (நவ.24) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 'மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவாகக்கூடும்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது 25-ம் தேதி வாக்கில், குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் நாளை ( நவம்பர் 24) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.25 முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 27-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்றைக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 26 செமீ, ஊத்தில் 25 செமீ, காக்காச்சியில் 23 செமீ, மாஞ்சோலையில் 21 செமீ அதிகனமழை பதிவாகியுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்தில் தலா 13 செமீ, கயத்தாரில் 11 செமீ, காயல்பட்டினத்தில் 10 செமீ, சாத்தான்குளம், தென்காசி மாவட்டம் ஆயிக்குடி, செங்கோட்டை ஆகிய இடங்களில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது’ இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை கண்டித்து டிச. 8ல் ஆர்ப்பாட்டம் - சிபிஎம், சிபிஐ, விசிக அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in