கோவை, குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

கோவை, குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

படம்: ம.பிரபு

Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கோவை, குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக நாளையும் (ஜூலை 31), நாளை மறுதினமும் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுதினம், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களிலில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஆக.2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் லேசான மழையும், 3 முதல் 5-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் நாளை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் மேல் பவானி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 6 செ.மீ, கோவை மாவட்டம் சோலையார், சின்கோனா, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, தேவாலா, சென்னை சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கோவை, குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
“விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தஞ்சையில் தக்க பாடம் புகட்டுவோம்” - உதயநிதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in