

சென்னை: சட்டப்பேரவையில் அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, கோயில் திருப்பணிகள், குடமுழுக்கு எண்ணிக்கைகள் மற்றும் கோயில் நிலங்கள் மீட்பு குறித்து அமைச்சர் ரமேஷ் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் அமைச்சர் ரமேஷ் பேசுகையில், “வெற்றி திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் உலகளாவிய சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படும். மீண்டும் கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்கள் நடத்தப்படும். அறுபடை வீடுகள் முன்மாதிரியான ஆலயங்களாக மாற்றப்படும். பக்தர்களுக்கு அந்தந்த கோயில் வளாகத்திலேயே பிரசாதங்கள் தயார் செய்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார்.
பின்னர், “முன்பெல்லாம் லயோலா மணிக்கு போன் செய்தால், என்ன செய்கிறார், சாப்பிட்டாயா எனக் கேட்பார். இப்பொதெல்லாம் பாடநூல் கழக வாரியத்துக்கு வர வேண்டிய ரூ.58 லட்சம் நிதியை எப்போது தருவீர்கள் என கேட்கிறார்” என்று அவர் பேசினார்.
பின்னர், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “கொள்ளை விளக்கக் குறிப்பில் 3,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், திமுக ஆட்சியில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை 4,644 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம். மொத்தமாக திமுக ஆட்சியில் 4,930 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது.
தவெக ஐந்து ஆண்டுகளில் 3,000 கோயில்களுக்கு மட்டும் தான் குடமுழுக்கு நடத்தப்படும் என அறிவித்துள்ளீர்கள். இதுகுறித்து விளக்க வேண்டும். ஆதாரத்தோடு என்ன குற்றச்சாட்டுகள் வைத்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
நான் 50 ஆண்டுகளாக ஆன்மிக பயணத்தில் இருப்பவன். சிவன் சொத்து குல நாசம் என்பதை அறிந்தவன். என்ன குற்றச்சாட்டுகள் வைத்தால் அதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். ஓர் ஆட்சி நிறைவுற்றபோது, அதில் தொடங்கப்பட்ட பணிகள் அடுத்த ஆட்சியில் நிலுவையில் இருந்தால், அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தி நிறைவேற்றுவதுதான் திறமையான ஆட்சிக்கு அடையாளம்” என்று அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், “கடந்த திமுக ஆட்சியில் 2,494 திருக்கோயில்களுக்கு பொதுநல நிதியில் திருப்பணிகள் செய்வோம் என திட்டமிட்டு, மொத்த மதிப்பீட்டில் ரூ.392 கோடி நிலுவையில் உள்ளது. திருப்பணிகள் பாதியில் நிற்கும் நிலையிலும், பணிகள் தொடங்காத நிலையிலும் பல கோயில்கள் உள்ளன.
கடந்த பல வருடங்களாக கோயில் நகைகள் மறுமதிப்பீடு செய்யாமல் உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை கோயில் நகைகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என சட்டத்தில் உள்ளது. அதனை கடந்த ஆட்சியாளர்கள் பின்பற்றவில்லை.
40,245 ஏக்கர் கோயில் நிலங்கள் தனிநபர் பெயரில் பட்டாவாக மாறி இருக்கிறது. அதை தவெக அரசு மீட்கும். திமுக ஆட்சியில் அறநிலையத் துறையில் செய்தவற்றை ஆதாரத்துடன் எடுத்து வைத்திருக்கிறோம். அதை விரைவில் வெளியிடுவோம்” என்று அவர் கூறினார்.