

மதுரை: கருப்பு முருகானந்தத்துக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பாலியல் புகார் அளித்த பெண் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம். இவர் மீது பாஜக முன்னாள் நிர்வாகி திவ்யா சேஷாத்ரி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கருப்பு முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், ‘என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானது. தனது கணவரை பிரிந்து வாழ்வதாகவும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறி அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று அந்த பெண் அறிமுகமானார்.
அவருக்கு பல்வேறு உதவிகளை நான் செய்துள்ளேன். இந்நிலையில் என் மீது பொய் புகாரை அளித்துள்ளார். சமூகத்தில் மதிப்புமிக்க பொறுப்பில் உள்ளேன். எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது.
திவ்யா சேஷாத்ரி தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். தங்களை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என வாதிட்டார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மனுதாரரை கைது நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாம் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
பின்னர் நீதிபதி, காவல் துறை, புகார்தாரர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.