

மதுரை: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றக் கிளை ஒத்திவைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் நிர்மலா தேவி. தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டில் தன்னிடம் படித்த மாணவிகளைப் பாலியல் ரீதியில் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணை நடத்தி நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் விசாரித்து, நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் விதித்தும், பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.
இதனிடையே, சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்மலாதேவி உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் தனியாக மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இருந்து முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் மூத்த அரசு வழக்கறிஞர் ஆஜராக அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை செப்.21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்ட நீதிபதி, அன்று தினம் வழக்கு விசாரணையை தொடங்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என கூறினார்.