

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் 304 சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து இயக்குநர்களுக்கும் சுகாதாரத் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் 304 சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சிறப்பு அதிகாரிகள் மூலம் மருத்துவமனைகள் அளவிலான குறைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், தங்களது எல்லைக்கு உட்பட்ட மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். அதை, மாவட்ட சுகாதார அதிகாரிகள், இணை இயக்குநர்கள், மருத்துவக் கல்லூரி டீன்கள் மூலம் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறைகளைச் சரி செய்வதற்கு முன்னரும், பின்னரும் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய விரிவான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவமனைகளில் நிலவும் சுகாதார சீர்கேடு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் குறைபாடு, பாதுகாப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடுகளை கண்காணித்து, அதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை அண்ணா சாலை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் இதயவியல் துறையில் முதுநிலை பட்டப் படிப்பு இல்லாததால், தற்போதைய நிலையில் வெறும் 4 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். தினமும் 500-க்கும் மேற்பட்ட இதய நோயாளிகள் சிகிச்சை பெறும் இந்த மருத்துவமனையில், 133 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் இருந்தும், 150 செவிலியர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன.
இதனால், செவிலியர் பணியிடங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. எழும்பூர் தாய் - சேய் நல மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட வார்டு ஊழியர்கள், பாதுகாவலர்கள் முறையாக பயிற்சி பெறவில்லை என்றும், சிலர் மாலை நேரங்களில் வளாகத்துக்கு உள்ளேயே மது, போதைப் பொருள் பயன்படுத்துவதாகவும் புகார் வந்தது.
அதேபோல, மகப்பேறு வார்டுகளில் நீண்ட காலமாகப் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சிலர் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்குவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய உபகரணங்கள் இல்லாததால், நாள்தோறும் 3 முதல் 4 நோயாளிகளுக்கு மட்டுமே எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்படுகிறது.
அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் இதர மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். நோயாளிகளிடமும், உயிரிழந்தவர்களின் உறவினர்களிடமும் தூய்மைப் பணியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், உடற்கூறாய்வு ஊழியர்கள் என பலரும் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இத்தகைய சூழல் நிலவுகிறது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் எலிகள், நாய்கள், பாம்புகள் நடமாடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அரசு மருத்துவ மனைகளில் நிலவும் இந்த பிரச்சினைகளை தடுக்கவும், நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் சிறப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.