முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு கட்டுப்பாடு: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு கட்டுப்பாடு: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள முடிமாற்று சிகிச்சை மையங்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ‘மிஸ்டர் ஹேர்’ என்ற சிகை சீரமைப்பு சிகிச்சை நிலையத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை (டிஎம்எஸ்) அதிகாரிகள் கடந்த 10-ம் தேதி ஆய்வு நடத்தினர்.

அப்போது, பிளஸ் 2 படித்த 2 பேர் மருத்துவர்கள் என்ற பெயரில் முடி மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டது கண்டறியப்பட்டது. காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, தற்போதைய நிலையில் தமிழகம் முழுவதும் இதுபோல் செயல்படும் சிகிச்சை மையங்களை முறைப்படுத்துவதிலும், கண்காணிப்பதிலும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன, இதனால் சிலர் இம் மையங்களை பதிவு செய்யாமல் நடத்தி வருவது மட்டுமின்றி, பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள்கூட சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: தலை முடி உதிர்வதை மிகப்பெரிய அவமானமாகக் கருதும் சூழல் தற்போது உள்ளது. இதுபோல் போலி மருத்துவர்களை நம்பி சிகிச்சைக்கு செல்லும் பெரும்பாலோனர் படித்த பட்டதாரிகளாக உள்ளனர்.

கிளினிக் அல்லது மருத்துவமனை தொடங்க மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறையில் பதிவு செய்வது கட்டாயம் ஆகும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு உரிமம் வழங்கப்படும். அந்த மருத்துவ மையங்கள் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.

உயிரிழப்பு அபாயம்: ஆனால், முடி மாற்று சிகிச்சை மையங்கள், அழகு நிலைய அடையாளத்துடன் பல இடங்களில் செயல்படுகின்றன. இதனால் அவை எங்களுடைய கட்டுப்பாட்டில் வருவதில்லை. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளும் போலி மருத்துவர்கள் பலர் சிகிச்சை அளிக்கின்றனர். இதுபோன்ற தவறான

சிகிச்சைகளால் உயிரிழப்பு ஏற்படலாம். எனவே, அங்கீகாரம் பெறாத சிகிச்சை மையங்களையும் எங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு கட்டுப்பாடு: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்
மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி 2-வது நாளாக மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in