

உயர் நீதிமன்றம் மதுரை கிளை
மதுரை: சிறை கைதிகள் மத நம்பிக்கைக்காக வளர்க்கும் தலைமுடியை வெட்ட கட்டாயப்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த பேபி கமலம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: என் மகன் ஜேம்ஸ் செல்லத்துரை பாளை சிறையில் உள்ளார். அவர் மத நம்பிக்கை அடிப்படையில் தலைமுடியை வளர்த்து வருகிறார். அவரது தலைமுடியை வெட்டவும், மீசையை அகற்றவும் சிறை நிர்வாகம் வற்புறுத்தி வருகிறது. இதைத் தவிர்க்குமாறு, சிறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் முடி வெட்ட கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
எனவே, தலைமுடியை வெட்டவும், மீசையை அகற்றவும் என் மகனை கட்டாயப்படுத்தக் கூடாது என, சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, பி.முருகேசன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், சிறையில் சுகாதாரத்தைப் பராமரிக்கும் வகையில், தமிழ்நாடு சிறை விதியின்படி கைதிகளின் தலைமுடி, நகங்களை ஒழுங்குப்படுத்த அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கைதி தலைமுடியை வளர்ப்பதால், மற்ற கைதிகளின் சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே விதிப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை மனுதாரரின் மகனை தலைமுடியை வெட்ட கட்டாயப்படுத்தமாட்டோம் எனக் கூறப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், மத நம்பிக்கைக்காக தலைமுடி வளர்க்கும் விசாரணைக் கைதியை சுகாதார பாதிப்பு ஏற்படாதவரை முடியை வெட்டுமாறு சிறை நிர்வாகம் கட்டாயப்படுத்த வேண்டாம். இது தொடர்பாக தமிழ்நாடு சிறை விதிகள் 204, விதி 213(3)-ஐ கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.