

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: தமிழகத்தில் உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் பதவி கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அனுப்பியது தொடர்பாக விரிவாக பதிலளிக்க, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்ததும், முந்தைய திமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களாகப் பணிபுரிந்தவர்கள் பதவி விலகினர். இதையடுத்து, புதிய அரசு சார்பில் உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜராக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், அரசியல் தலையீடு இருக்கக் கூடாது, உரிய தகுதியுடையவர்களைதான் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெற்றபோது, உச்ச நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை. இதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் குற்றவியல் பிரிவு அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பிக்க கடந்த மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இச்சூழலில் தற்போதைய ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் தங்கள் கட்சியினருக்கு அரசு வழக்கறிஞர் பதவி கேட்டு கடிதம் கொடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது.
எனவே, அரசு வழக்கறிஞர் நியமனம் வெளிப்படையாக நடைபெறும் வகையில் நிலையான செயல்முறைகளை உருவாக்கி அமல்படுத்தவும், அதுவரை கூட்டணி கட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள பட்டியலில் இருப்பவர்கள் மற்றும் வேறு தனி பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு வழக்கறிஞர்களை
நியமிக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், சமூக வலைதளங்களில் வந்த தகவல் என்றாலும், ஒரு அரசியல் கட்சி சட்ட அமைச்சருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசுத் தரப்பில், கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்படமாட்டார்கள் எனக் கூறப்பட்டது. பின்னர் நீதிபதிகள், கடிதம் தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.