புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு கடைசிமாத ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கும் வகையில் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்து, இது சம்பந்தமாக அரசாணையும் பிறப்பித்துள்ளது.

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து விருப்ப ஓய்வுபெற்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் ரேணுகாதேவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், ‘புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளதால், 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் ஓய்வுபெற்றவர்கள் ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பங்களிப்பை வழங்கிய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெற உரிமை உள்ளது. அதை மறுப்பது, நியாயமற்றது. அரசின் நிதிச்சுமையை குறைப்பதற்காகவே பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் தேதியை கணக்கில் கொள்ளாமல், ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என மனுவில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ‘பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 73 ஆயிரம் கோடி ரூபாய் எல்.ஐ. சி. நிறுவனத்தில் இருப்பதாக நிதி அமைச்சர் கூறியிருப்பதால், 2025 டிசம்பருக்கு முன் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது’ எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் செலுத்திய தொகை வட்டியுடன் சேர்ந்துள்ளதால், பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், மாதாந்திர ஓய்வூதியமாக 8,430 ரூபாயுடன், அகவிலைப்படியும் சேர்த்து, ஓய்வூதியம் வழங்கும்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, மார்ச் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
“இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறுகிறது பாஜக” - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in