

சென்னை மாநகராட்சி
சென்னை: ஓட்டேரி நல்லா கால்வாயில் பாலம் கட்டியதில் 90 லட்ச ரூபாய் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டலத்தில் உள்ள ஆஸ்பிரான் தோட்டம் 2-வது தெருவையும், கீழ்ப்பாக்கம் தோட்டச் சாலையையும் இணைக்கும் வகையில், ஓட்டேரி நல்லா கால்வாய் மீது கட்டப்பட்டிருந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலத்தை கட்ட, தாமஸ் அய்யாதுரை இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் என்ற நிறுவனத்துக்கு மாநகராட்சி டெண்டர் வழங்கியது.
இதில் திட்ட மதிப்பீடுகளை அதிகரித்து காட்டி, அரசு பணத்தை தவறான பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக, விசாரணை நடத்தி குற்ற நடவடிக்கை எடுக்கக் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், மாநகராட்சி அதிகாரிகள் ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் சரவணபவநாதன் , தற்போதைய தலைமை பொறியாளர் சங்கரவேலு, மேற்பார்வை பொறியாளர் கணேசன், உதவி செயற் பொறியாளர் கோமதி, உதவி பொறியாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் தனியார் நிறுவனதுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலம் காட்டுவதற்காக நிலம் கையகப்படுத்திய வகையில் 20 லட்ச ரூபாயும், விளக்குகள் அமைப்பதற்காக 20 லட்ச ரூபாயும், தளவாட பொருட்களை இடமாற்றம் செய்ததற்காக 20 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், இதர செலவீனங்களுக்காக 31 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயும் என 92 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளதே தவிர, நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஏதும் நடைபெறவில்லை; விளக்குகள் அமைக்க 11 ஆயிரத்து 470 ரூபாய் மட்டுமே செலவாக்கியுள்ளது என்பத்து தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், தளவாட பொருட்கள் இடமாற்றம் மற்றும் இதர செலவீனங்களுக்காக எந்த வித ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை; இந்த முறைகேடு தொடர்பாக கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை; எனவே தனது புகாரில் விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.