சென்னை உயர் நீதிமன்றத்தை சுற்றியுள்ள சாலைகளில் வியாபாரம் நடக்கவில்லை என்று உறுதி செய்ய உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள 4 சாலைகளிலும் வியாபாரம் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்யுமாறு மாநகராட்சி ஆணை யருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை ஜன. 7-ம் தேதி தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை என்எஸ்சி சாலை பகுதியில் உள்ள சாலையோரக் கடைகளை அகற்றி,சாலையை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது, உயர் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள என்எஸ்சி போஸ் சாலை உள்ளிட்ட 4 சாலைகளையும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வழக்கறிஞர்கள், பொதுமக்களின் வாகனப் போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுவதாகவும் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள்,"உயர் நீதிமன்றம் எதிரேயுள்ள என்எஸ்சி போஸ் சாலையில் சாலையோர வியாபாரிகளை அனுமதிக்கக் கூடாது என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் எச்சரித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, அப்பகுதியில் சாலையோர வியாபாரம் நடை பெறவில்லை என்பதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதைக் கண்காணிக்க சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும். அதேபோல, சென்னை உயர் நீதிமன்றத்தைச் சுற்றிலும் உள்ள பிற சாலைகளிலும் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த 4 சாலைகளிலும் வியாபாரம் செய்யக்கூடாது என்று அறிவித்து, நடைபாதை மற்றும் போக்குவரத்தை சீரமைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, விசார ணையை ஜன. 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை ஜன. 7-ம் தேதி தாக்கல் செய்யுமாறு மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
