

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம் வழக்கில் தனிப்படை காவலர்கள் இருவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கடந்த ஜூன் 27-ல் நகை திருட்டு வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு உயர் நீதிமன்றம் மாற்றியது. சிபிஐ விசாரணை நடத்தி தனிப்படை காவல் வேன் ஓட்டுநரை 6-வது குற்றவாளியாக சேர்த்து விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சிபிஐ கடந்த வாரம் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அஜித்குமார் காவல் மரணம் வழக்கில் மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தனிப்படை காவலர்கள் ராஜா, பிரபு ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவில், இந்த வழக்கில் தங்களுக்கு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் கைது செய்யப்பட்டுள்ளோம். சிபிஐ விசாரணையை முடித்து விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 168 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளோம். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.7-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.