

சென்னை: சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி ஷாஜூ அலெக்ஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஆர். ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனனும், அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஆர்.வி.காயத்ரி மற்றும் சி.பிரபாகரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.
பின்னர் நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: நடைபாதைகள், சாலைகளை ஆக்கிரமிப்பது சட்ட விதிமீறல். ஆக்கிரமிப்புகள் இல்லாத முறையான நடைபாதை மற்றும் சாலை வசதிகள் குடிமக்களுக்கான அடிப்படை உரிமை. அந்த உரிமையை செய்து கொடுக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளின் கடமை.
எனவே, தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறை முதன்மைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை முதன்மை செயலர் உள்ளிட்ட அரசு துறைகளின் அதிகாரிகள், சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, பாதசாரிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு முறையான வழித்தடத்தை உருவாக்கி கொடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக ஒருங்கிணைந்து எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிச.10-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.