அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொ.கு. வழக்கை விரைந்து முடிக்க தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

அமலாக்கத் துறை மனு தள்ளுபடி
திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன்

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன்

Updated on
1 min read

சென்னை: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அந்த வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய அமலாக்கத் துறை வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2001-2006-ஆம் ஆண்டுகளின் திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக அனிதா ராதாகிருஷணன் பதவிவகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது குடும்பத்தினருக்கு எதிராகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

அந்த சொத்துக் குவிப்பு வழக்கின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. அதனடிப்படையில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணனும் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தூத்துக்குடி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு சாட்சிகள் விசாரணை முடிந்து, வழக்கறிஞர்கள் இறுதி வாதம் துவங்க உள்ள நிலையில், வழக்கை மதுரையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றும்படி கோர முடியாது எனத் தெரிவித்துள்ளது.

மேலும், முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வழக்கு தொடர அரசு அனுமதி பெறப்படவில்லை எனவும், அமலாக்கத் துறை வழக்கு இன்னும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், முன்கூட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அமலாக்கத் துறையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தூத்துக்குடி நீதிமன்ற விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிய நீதிபதிகள், சொதுக் குவிப்பு வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

<div class="paragraphs"><p>திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன்</p></div>
“பேரவைக்குள் வரவே உதயநிதிக்கு தகுதி இல்லை” - அமைச்சர் நிர்மல் குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in