’முதல்வருக்கு அரோகரா கோஷம்’ - பாடகர்கள் பொது வெளியில் மன்னிப்பு கோரியதால் வழக்கு முடித்துவைப்பு

’முதல்வருக்கு அரோகரா கோஷம்’ -   பாடகர்கள் பொது வெளியில் மன்னிப்பு கோரியதால் வழக்கு முடித்துவைப்பு
Updated on: 
2 min read

மதுரை: சூரசம்ஹாரம் விழாவில் முதல்வருக்கு அரோகரா கோஷம் எழுப்பிய பாடகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், பாடகர்கள் இருவரும் பொது வெளியில் மன்னிப்பு கோரியதால் உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா, மிகவும் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்று. விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் விரதம் இருந்து பங்கேற்கின்றனர். சூரசம்ஹாரம் நிகழ்வு சூரபத்மன் மீது முருகப் பெருமான் பெற்ற வெற்றியைக் குறிக்கும் புனிதமான மத நிகழ்வாகும். இது மத பக்தி, வழிபாடு மற்றும் பாரம்பரிய அனுஷ்டானங்களுடன் தொடர்புடைய நிகழ்வாகும். இந்த நிகழ்வின்போது பக்தர்கள், முருகப் பெருமானைப் போற்றி ’அரோகரா’ என்ற பக்தி முழக்கம் எழுப்புவர்.

இந்த ஆண்டு திருச்செந்தூரில் நவ.15 அன்று சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பின்னணி பாடகர்கள் வேல்முருகன், புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் இணைந்து, முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டதுடன் தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோருக்கும் ‘அரோகரா’ என்ற முழக்கம் செய்தனர். ‘அரோகரா’ என்ற முழக்கம் முருகப் பெருமானின் மீதான பக்தியால் கடவுளைப் போற்றி எழுப்பப்படும் கோஷமாகும்.

இதை அரசியல் பதவி வகிப்பவர்களைப் புகழ்ந்துரைக்க வேண்டும் என்றே பயன்படுத்தினால் மத நம்பிக்கையை சீர்குலைப்பதாகும். மத நிகழ்வை எந்தவொரு அரசியல் தலைவர் அல்லது பொதுப் பதவி வகிப்பவரின் அரசியல் விளம்பரத்திற்கோ, தனிப்பட்ட புகழுக்கோ அல்லது கட்சி சார்ந்த முன்னிலைப்படுத்தலுக்கான மேடையாக மாற்ற அனுமதிக்கக் கூடாது.

எனவே, சூரசம்ஹாரம் நிகழ்வு தொடர்பாகப் அந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும், கோஷம் எழுப்பியவர்கள் கோயில் நிர்வாகம் அல்லது துறையால் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டனரா, நிகழ்ச்சி தகுதி வாய்ந்த அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்டதா, அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் ஏதேனும் அரசியல் குறிப்புகள் சேர்க்கப்பட்டிருந்ததா, இவர்களுக்கு கோவில் நிதி செலவிடப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.

எனவே திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவின் போது கோஷம் எழுப்பிய நபர்கள் மீதும் அதற்கு துணை போன அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், மத சடங்குகளும் கோயில் திருவிழாக்களும் அரசியல் புகழுக்கான மேடைகளாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதையும், கோயில் நிர்வாகம் அத்தகைய நிகழ்வுகளின் மத நோக்கத்தையும் பாரம்பரியத் தன்மையையும் பராமரிப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்.” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், சுமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், திருச்செந்தூர் கோயில் சூரசம்ஹார விழாவில் அரசியல் தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு அரோகரா கோஷம் எழுப்பியதை அரசு ஏற்கவில்லை. இந்த செயலை கண்டித்துள்ளது. அவ்வாறு கோஷம் எழுப்பிய பாடகர்கள் இருவரும் தவறை உணர்ந்து பொது வெளியில் மன்னிப்பு கோரியுள்ளனர். எதிர்காலத்தில் கோயில் விழாக்களில் இதுபோல் நடைபெறாமல் தடுக்கப்படும். இது தொடர்பாக உரிய வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “இருவரும் புகழ் பெற்ற நாட்டுப்புற பாடகர்கள், ஏன் இவ்வாறு நடந்து கொண்டனர். உணர்ச்சி வசப்பட்டர்களா அல்லது சாமி வந்துவிட்டதா” என்றனர். பின்னர் நீதிபதிகள், இருவரும் தவறை உணர்ந்து பொது வெளியில் மன்னிப்பு கோரியுள்ளனர். அரசும் இனிமேல் கோயில் நிகழ்வுகளில் இதுபோல் நடைபெறாமல் தடுக்கப்படும், வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படும் எனக் உறுதி அளித்துள்ளது. எனவே வேறு உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை. மனு முடிக்க படுகிறது” என உத்தரவிட்டனர்.

’முதல்வருக்கு அரோகரா கோஷம்’ -   பாடகர்கள் பொது வெளியில் மன்னிப்பு கோரியதால் வழக்கு முடித்துவைப்பு
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தேரோட்டம்

X