

எச். ராஜா |கோப்புப் படம்
சென்னை: “தமிழ்நாட்டை சூறையாடிக் கெடுக்கின்ற திமுக அரசை தூக்கியெறியவில்லை என்றால் தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமாக மாறிவிடும்.” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சாமி தரிசனம் செய்யவந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்டாலின் குடும்பம், தீபாவளிக்கு கூட வாழ்த்து கூறுவதில்லை. திமுக, கருணாநிதி குடும்பம் இந்து விரோதிகள் அல்ல என்றால், வரும் 30-ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோயிலுக்கு போகவேண்டும். இல்லை என்றால் இந்துக்கள் அனைவரும், இந்து விரோத திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம் என முடிவு செய்ய வேண்டும். அவரைச் சுற்றி உள்ள அனைவரும் இந்து விரோதிகள், சமுதாயத்தை சிதைக்க நினைப்பவர்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், “முருகன் என்ற பெயரை பிராமணர்கள் சூட்டுவார்களா?” எனப் பேசி உள்ளார். எந்த இஸ்லாமியர், முருகன் பெயரை சூட்டியுள்ளார்கள் என அவர்களுக்கு பின்னால் நிற்கின்றார். சமுதாயத்தில் இருக்கின்ற தீயசக்தி திருமாவளவன். 2026 சட்டபேரவை தேர்தலில், அவர்களை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வில்லை என்றால், இந்து சமுதாயத்தினர் கவுரமாக வாழ முடியாது.
திருச்செந்தூரில் ரூ.306 கோடியில் நடைபெற்ற திருப்பணிகளில் தரமானதாக இல்லை. பக்தர்கள் வழங்கும் தொகையில் 50 சதவீதம் கொள்ளை அடிக்கின்றார்கள்.
பழநியில் நடைபெற்ற முருகன் மாநாடு தொடர்பான வரவு செலவு கணக்குகளை வழங்கவில்லை. எனவே, கோயில் தொகைகளை சுரண்டுகின்ற, சூறையாடுகின்ற, சட்டவிரோதமாக பணம் வசூலிக்கின்ற துறையாக இந்து அறநிலையத் துறை இயங்குகிறது. 2026-தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், அறநிலையத் துறை கலைக்கப்படும்.
10 ஆண்டுகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் என்ன ஆனது என்று தெரியவில்லை. இதேபோல் தங்கத்தை உருக்கினார்கள். மேலும், பொருளாதார ரீதியாக தமிழகத்தை, தமிழக அரசு, அழித்துக் கொண்டிருக்கின்றது.
ஏனென்றால், ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடனை கூடுதலாக வாங்கி வைத்துள்ள நிலையில், அடுத்த வரும் அரசு எப்படி கடனை அடைக்க முடியும்.
தமிழ்நாட்டை சூறையாடிக் கெடுக்கின்ற திராவிட திமுக அரசை தூக்கியெறியவில்லை என்றால் தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமாக மாறிவிடும். வேலை தூக்கிக்கொண்டு முதலில் போனது சீமான், அது ஏமாற்று வேலையா. உண்மைகளை பேசினால் கருத்து மோதல் வரும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கிறிஸ்துவர்கள், கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்களைத் தாக்கியது குறித்த கேட்டபோது, ‘இது வதந்தி, அதைப் பற்றி பேசமாட்டேன்’ என பதிலளித்தார்.