

மணிக் உத்தீன் லஸ்கர், பகவதி மாஜி ஆகியோரை கைது செய்து அழைத்து வரும் கூடுவாஞ்சேரி தனிப்படை போலீஸ்.
தாம்பரம்: கூடுவாஞ்சேரியில் பெண் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மணிக் உத்தீன் லஸ்கர் (22), அவரது மனைவி பகவதி மாஜியை, நக்சல் ஆதிக்கம் நிறைந்த மணிப்பூர் பகுதியில் ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்று கூடுவாஞ்சேரி தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கூடுவாஞ்சேரியில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத்துன் நிஷா (38) என்ற பெண் கடந்த ஆக.2-ம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மணிக் உத்தீன் லஸ்கர் என்பவர் மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பதுங்கியிருப்பது தனிப்படை போலீஸாருக்கு தெரியவந்தது.
அங்கு தனியாக செல்வது பாதுகாப்பானது இல்லை என மணிப்பூர் போலீஸார் எச்சரித்தனர். இதையடுத்து ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய மணிப்பூர் போலீஸாரின் பாதுகாப்புடன் சென்ற கூடுவாஞ்சேரி தனிப்படை போலீஸாரை பார்த்த மணிக் உத்தீன் அங்கிருந்து தப்பியோடினார்.
இதையடுத்து போலீஸார் மணிப்பூரைச் சேர்ந்த ஒருவர் மூலம், மணிக் உத்தீனை மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லுமாறு கூறச் செய்தனர். அதன்பதிவு எண் மற்றும் அவர் செல்லும் வழியை அறிந்த போலீஸார், துரத்திச் சென்று அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் பகவதி மாஜியும் சிக்கினார்.
ஹயாத்துன் நிஷா (38) விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது மணிக் உத்தீன் லஸ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர் மேலும் அளித்ததாகக் கூறப்படும் வாக்கு மூலத்தில், நிஷா கர்ப்பமானதால் கொலை செய்ததாகவும், அதன் பிறகு உடலை அப்புறப்படுத்துவது குறித்து யூடியூப் வீடியோக்களை பார்த்து அதன்படி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்த போலீஸார், 6 நாட்கள் காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். துணிச்சலுடன் செயல்பட்டதனிப்படை போலீஸாரை கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.