திருவிடைமருதூர் தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

திருவிடைமருதூர் தொகுதியில்  வெற்றி மகுடம் யாருக்கு?
Updated on
2 min read

திருவிடைமருதூர் தொகுதியில் திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஒன்றியங்கள், கும்பகோணம் கிழக்கு, மத்திய ஒன்றிய பகுதிகள், திருப்பனந்தாள், ஆடுதுறை, திருவிடைமருதூர், திருபுவனம், வேப்பத்தூர் பேரூராட்சி பகுதிகள் உள்ளன. இங்கு வாழை, பருத்தி, மஞ்சள், எள் மற்றும் முப்போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

திருவிடைமருதூர் தொகுதியில் பட்டியலினத்தவர், வன்னியர் உள்ளிட்டோர் அதிகளவில் வசிக்கின்றனர். இந்தத் தொகுதியில், கடந்த தேர்தல்களில் திமுக 7 முறை, காங்கிரஸ் 2 முறை, அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளன.

கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கோவி.செழியன் 95,763 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வீரமணி 85,083 வாக்குகள் பெற்று 10,680 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யபாரதி 11,176 வாக்குகள் பெற்றார்.

2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தல்களில் திமுக சார்பில் கோவி.செழியன் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சராக உள்ள கோவி.செழியன் மீண்டும் 4-வது முறையாக போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ இளமதி சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி சார்பில் 2-வது முறையாக திவ்யபாரதி, தவெக சார்பில் பிரபாகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அமைச்சர் கோவி.செழியன் கடந்த 15 ஆண்டுகளாக திருவிடைமருதூர் தொகுதிக்குதான் செய்த பணிகள், பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும், இளமதி, திவ்யபாரதி, பிரபாகரன் ஆகியோர் தாங்கள் செய்யப் போகிற பணிகள் குறித்து வாக்காளர்களிடம் விளக்கியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொகுதி மக்களின் கோரிக்கைகள்

* விவசாயம் சார்ந்த தொகுதியான திருவிடைமருதூரில் வேளாண் கல்லூரி, பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மைதானம் மற்றும் அந்தப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித் தரவேண்டும்.

* மருத்துவர்களுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும். சொந்த இடமில்லாத நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த இடத்தை ஒதுக்கி, கட்டமைப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* நெசவாளர்களின் தரம் உயர ஜவுளிப் பூங்கா அமைத்து, அதில் நெசவாளர்களின் சந்ததியினருக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி மையம் அரசு சார்பில் நடத்த வேண்டும்.

* அணைக்கரை கீழணையை சுற்றுலா தலமாக்கி, அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். அங்கு முதலைகளுக்கான சரணாலயம் அமைக்க வேண்டும்.

இதுவரை வென்றவர்கள்

  • 1977 - எஸ்.ராமலிங்கம் - திமுக

  • 1980 - எஸ்.ராமலிங்கம் - திமுக

  • 1984 - எம்.ராமலிங்கம் - காங்கிரஸ்

  • 1989 - எஸ்.ராமலிங்கம் - திமுக

  • 1991 - என்.பன்னீர்செல்வம் - காங்கிரஸ்

  • 1996 - எஸ்.ராமலிங்கம் - திமுக

  • 2001 - தவமணி - அதிமுக

  • 2006 - பாரதிமோகன் - அதிமுக

  • 2011 - கோவி.செழியன் - திமுக

  • 2016 - கோவி.செழியன் - திமுக

  • 2021 - கோவி.செழியன் - திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை

  • ஆண்கள் - 1,25,132

  • பெண்கள் - 1,29,313

  • மூன்றாம் பாலினத்தவர் - 8

  • மொத்தம் - 2,54,453

திருவிடைமருதூர் தொகுதியில்  வெற்றி மகுடம் யாருக்கு?
தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in