

தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் முக்தி அடைந்த தலம் உள்ளது. இந்தப் பகுதியில் கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆறு என 5 ஆறுகள் பாய்ந்து இப்பகுதியை வளமாக்குகின்றன.
பிரதானமாக நெல், வாழை, வெற்றிலை, கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த தொகுதியில் முக்குலத்தோர், முஸ்லிம்கள், பட்டியல் இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இந்த தொகுதியில் 1989-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதன்முதலாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுகவில் துரை.சந்திரசேகரன் களமிறக்கப்பட்டார்.
சிவாஜிகணேசன் திரைப்படங்களில் கோலோச்சிய காலகட்டமாக இருந்தாலும் அவர் 10,643 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட துரை.சந்திசேகரன் வெற்றி பெற்று தனது வெற்றிக்கான இன்னிங்ஸை தொடங்கினார்.
அதிலிருந்து துரை.சந்திரசேகரன் 7 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் திமுக 8 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் துரை.சந்திரசேகரன் 1,03,210 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த வெங்கடேசன் 49,560 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். அமமுக சார்பில் போட்டியிட்ட வேலு.கார்த்திகேயன் 37,469 வாக்குகளும், நாம் தமிழர்கட்சி சார்பில் போட்டியிட்ட செந்தில் நாதன் 15,820 வாக்குகளும் பெற்றனர்.
இந்த முறை திமுக சார்பில் துரை.சந்திரசேகரன், அமமுக சார்பில் வேலு.கார்த்திகேயன், நாதக சார்பில் டி.செந்தில்நாதன் ஆகியோர் மீண்டும் களமிறங்கியுள்ளனர். தவெக வேட்பாளராக மணிகண்டனும் போட்டியிடுகிறார்.
5 முறை எம்எல்ஏவாக இருந்த திமுகவின் துரை.சந்திரசேகரன், தொகுதிக்கு தான் கொண்டு வந்த திருவையாறு புறவழிச்சாலை, திருக்காட்டுப்பள்ளி புறவழிச்சாலை, காவிரி, வெண்ணாறுகளில் பல இடங்களில் புதிய பாலங்கள் போன்ற திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
இருந்தாலும் செங்கிப்பட்டி, பூதலூர் பகுதியில் உள்ள கிராமங்களில் இன்னும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த முறை தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து சுமார் 37 ஆயிரம் வாக்குகளை பெற்ற அமமுக வேட்பாளர் வேலு.கார்த்திகேயன், இந்த முறை அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது தனக்கு பலமாக இருக்கும் என கணக்கு போடுகிறார்.
மேலும், துரை.சந்திரசேகரன் 5 முறை எம்எல்ஏவாக இருந்தும் இன்னும் பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை என்றும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தரப்படும் என்றும் கூறி வேலு.கார்த்திகேயன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதேபோல, தவெக, நாதக வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொகுதியில் திமுக- அமமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. திமுகவே மீண்டும் வெல்லுமா? அல்லது அமமுக வென்று திருப்பத்தை ஏற்படுத்துமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
எதிர்பார்ப்புகள்
* வாழை, வெற்றிலை விற்பனைக்கு அரசு ஏலச்சந்தை அமைக்க வேண்டும்.
* செங்கிப்பட்டி, பூதலூர் பகுதியில் உள்ள கிராமங்களில் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
* செங்கிப்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு கூடுதல் கவனம் வேண்டும்.
* கரிகாலச்சோழனுக்கு அரசு சார்பில் பிறந்தநாள் விழா எடுக்க வேண்டும்.
* நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
* கொள்ளிடம், காவிரி ஆறுகளில் மணல் திருட்டை தடுக்க வேண்டும்.
* கல்லணை, தென்பெரம்பூர் அணைப் பகுதிகள் சுற்றுலா தலமாக இருப்பதால், போதிய மேம்பாட்டு பணிகளை அதிகப்படுத்த வேண்டும்.
இதுவரை வென்றவர்கள்
1957- சுவாமிநாதன் - காங்கிரஸ்
1962 - பழனி - காங்கிரஸ்
1967 - க.முருகையன் - திமுக
1971 - இளங்கோவன் - திமுக
1977 - இளங்கோவன் - திமுக
1980 - சுப்பிரமணியன் - அதிமுக
1984 - துரை.கோவிந்தராஜன் - அதிமுக
1989 - துரை.சந்திரசேகரன் - திமுக
1991 - கலியபெருமாள் - அதிமுக
1996 - துரை.சந்திரசேகரன் - திமுக
2001 - அய்யாறு வாண்டையார் - அதிமுக
2006 - துரை.சந்திரசேகரன் - திமுக
2011 - ரத்தினசாமி - அதிமுக
2015 - துரை.சந்திரசேகரன் - திமுக
2021 - துரை.சந்திரசேகரன் - திமுக
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண்கள் - 1,25,357
பெண்கள் - 1,31,000
மூன்றாம் பாலினத்தவர் - 20
மொத்தம் - 2,56,377