

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடைப் பகுதியாக விளங்கும் பேராவூரணி தொகுதியில் தென்னை விவசாயமும், மீன்பிடித் தொழிலும் பிரதானமாக விளங்குகின்றன. இந்த தொகுதியில் மீனவர்கள், முஸ்லிம்கள், முத்தரையர்கள், முக்குலத்தோர், பட்டியலினத்தவர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.
இங்கு அதிமுக 5 முறையும், காங்கிரஸ், தமாகா தலா 2 முறையும், திமுக, தேமுதிக, சுயேச்சை தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொகுதியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட நா.அசோக்குமார் 89,130 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.வி.திருஞான சம்பந்தம் 65,627 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். நாதக சார்பில் போட்டியிட்ட கே.திலீபன் 12,623 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட எம்.சிவகுமார் 1,623 வாக்குகளும் பெற்றனர்.
கள நிலவரம்
இந்த தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏவான நா.அசோக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல, அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மா.கோவிந்தராஜ் மகன் கோவி.இளங்கோ, நாதக சார்பில் எம்.புவனா, தவெக சார்பில் சந்திரகாண்டீபன் ஆகியோரும் களமிறங்குகின்றனர்.
திமுக வேட்பாளர் கடந்த 5 ஆண்டுகளில் இந்த தொகுதியில் செய்த வளர்ச்சித்திட்டங்களையும், அரசின் நலத்திட்டங்களையும் மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார். அதற்கு மக்களிடம் வரவேற்பு இருப்பதால், இந்த முறையும் வெற்றி உறுதி என நம்பிக்கையுடன் உள்ளார்.
அதேபோல, அதிமுக வேட்பாளர் கோவி.இளங்கோ, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எம்எல்ஏ அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றாமல் உள்ளவற்றை விமர்சித்தும், இந்த தொகுதியின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை எடுத்துக் கூறியும் வாக்குச் சேகரித்து வருகிறார்.
மேலும், 2024 மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதிக்கு உட்பட்ட பேராவூரணியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரும், தனித்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் வாங்கிய வாக்குகள், திமுக வேட்பாளர் வாங்கிய வாக்குகளைவிட கூடுதலாக இருப்பதால் வெற்றி நமக்கே என்ற அசாத்திய நம்பிக்கையில் உள்ளார்.
இதேபோல, நாதக, தவெக வேட்பாளர்களும் தங்களது பாணியில் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்தும், வாக்காளர்களை சந்தித்தும் வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். இங்கு திமுக- அதிமுக இடையேதான் போட்டி நிலவுகிறது.
தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள்
* மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்.
* மீன்கள், இறால்களை பாதுகாத்து விற்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும்.
* சுற்றுலாத் தலமான புதுப்பட்டினம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
* மனோரா நினைவுச் சின்னத்தை பார்வையிட வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும்.
* கடற்கரை கிராமங்களில் சாலை, குடிநீர், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
* தென்னை விவசாயம் இப்பகுதியில் பிரதானமாக இருப்பதால் தென்னை வளர்ச்சி வாரியத்தின் கிளை அலுவலகத்தை பேராவூரணியில் அமைக்க வேண்டும்.
* கிழக்குக் கடற்கரை சாலையை அகலப்படுத்தி நான்குவழிச் சாலையாக மேம்படுத்த வேண்டும்.
இதுவரை வென்றவர்கள்
1971 - குழ.செல்லையா - சுயேச்சை
1977 - எம்.ஆர்.கோவிந்தன் - அதிமுக
1980 - எம்.ஆர்.கோவிந்தன்- அதிமுக
1984 - எம்.ஆர்.கோவிந்தன் - அதிமுக
1989 - ஆர்.சிங்காரம் - காங்கிரஸ்
1991 - ஆர்.சிங்காரம் - காங்கிரஸ்
1996 - எஸ்.வி.திருஞானசம்பந்தம் - தமாகா
2001 - எஸ்.வி.திருஞானசம்பந்தம் - தமாகா
2006 - எம்.வி.ஆர்.வீரகபிலன் - அதிமுக
2011 - சி.அருண்பாண்டியன் - தேமுதிக
2016 - மா.கோவிந்தராஜ் - அதிமுக
2021 - நா.அசோக்குமார் - திமுக
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண்கள் - 1,04,268
பெண்கள் - 1,08,543
மூன்றாம் பாலினத்தவர் - 15
மொத்தம் - 2,12,826