அரியலூர் தொகுதியில் அரியாசனம் யாருக்கு?

அரியலூர் தொகுதியில் அரியாசனம் யாருக்கு?
Updated on
2 min read

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறிய அரியலூர் பகுதியில் அதிகளவில் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 8 சிமென்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன. நெல், கரும்பு, கடலை, முந்திரி ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

உடையார், வன்னியர், மூப்பனார், பட்டியலின மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக முதலியார், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் உள்ளனர். இந்த தொகுதியில் இதுவரை திமுக, அதிமுக தலா 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேச்சை, தமாகா, மதிமுக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இதுவரை இத்தொகுதியில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக 7 முறை மோதியுள்ளன. இதில் 4 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது இரு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட கு.சின்னப்பா 1,03,975 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் 2-வது முறையாக போட்டியிட்ட தாமரை எஸ்.ராஜேந்திரன் 1,00,741 வாக்குகள் பெற்று 3,234 வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

நாதக வேட்பாளர் சுகுணா குமார் 12,346 வாக்குகளும், அமமுக வேட்பாள் துரை மணிவேல் 2,044 வாக்குகளும் பெற்றனர். தற்போது இந்தத் தொகுதியில் திமுக சார்பில் லதா பாலு, அதிமுக சார்பில் தாமரை எஸ்.ராஜேந்திரன், தவெக சார்பில் சிவக்குமார், நாதக சார்பில் புகழேந்தி உட்பட 15 பேர் களம் காண்கின்றனர்.

தொகுதியின் முதல் திமுக பெண் வேட்பாளரான லதா பாலு, திமுக அரசின் சாதனைகளையும், திமுகவின் தற்போதைய வாக்குறுதிகளையும் கூறி வாக்குச் சேகரித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் 3-வது முறையாக களம் காண்கிறார்.

இவர் 2016-ல் இதே தொகுதியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்று, அரசு தலைமைக் கொறடாவாக பணியாற்றினார்.

அப்போது அரியலூருக்கு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தாகவும், கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட திட்டம் கொண்டு வந்தாகவும், அதை திமுக அரசு ரத்து செய்துவிட்டதாகவும் கூறி வாக்குச் சேகரித்து வருகிறார். அத்துடன், அதிமுகவின் தற்போதைய தேர்தல் வாக்குறுதிகளையும் சொல்லி ஆதரவு திரட்டுகிறார்.

தவெக வேட்பாளர் சிவக்குமார், நாதக வேட்பாளர் புகழேந்தி ஆகியோர் இளைஞர்கள் பட்டாளத்துடன் பம்பரமாய் சுற்றி வருகின்றனர். இதில், திமுக, அதிமுக இடையே தான் பிரதான போட்டி நிலவுகிறது.

திமுக அரசின் சாதனைகள் கை கொடுக்கும் என திமுக வேட்பாளரும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் தொகுதியில் திமுகவைவிட அதிமுக 9,839 வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதுடன், அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 22,552 வாக்குகள் கிடைத்திருப்பதால், எப்படியும் இந்த முறை வெற்றி பெற்றுவிடலாம் என்று அதிமுக வேட்பாளரும் வலம் வருகின்றனர். அரியலூரில் அரியணை ஏறுவது யார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

எதிர்பார்ப்புகள்

* அரியலூர் தனி மாவட்டமாக இருந்தும் முறையான சாக்கடை வடிகால் வசதி, பெரிய அளவிலான வணிக நிறுவனங்கள் இல்லை.

* சிமென்ட் ஆலைகளுக்கு தனிச்சாலை அமைக்க வேண்டும்.

* சிமென்ட் ஆலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வேண்டும்.

* திருமானூரில் சேமிப்பு கிடங்குடன் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் வேண்டும்.

* திருமானூர், தா.பழூரை மையமாக கொண்டு நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும்.

* கொள்ளிடத்தின் குறுக்கே புதிய பாலத்துடன் கூடிய தடுப்பணை கட்டவேண்டும்.

இதுவரை வென்றவர்கள்

  • 1952 - பழனியாண்டி - சுயேச்சை

  • 1957 - எசு.ராமலிங்கம் - காங்கிரஸ்

  • 1962 - ஆர்.நாராயணன் - திமுக

  • 1967 - ஆர்.கருப்பையா - காங்கிரஸ்

  • 1971 - கோ. சிவப்பெருமாள் - திமுக

  • 1977 - த.ஆறுமுகம் - திமுக

  • 1980 - த.ஆறுமுகம் - திமுக

  • 1984 - எஸ்.புருசோத்தமன் - அதிமுக

  • 1989 - த.ஆறுமுகம் - திமுக

  • 1991 - சு.மணிமேகலை - அதிமுக

  • 1996 - து.அமரமூர்த்தி - தமாகா

  • 2001 - ப.இளவழகன் - அதிமுக

  • 2006 - து.அமரமூர்த்தி - காங்கிரஸ்

  • 2011 - துரை.மணிவேல் - அதிமுக

  • 2016 - தாமரை எஸ்.ராஜேந்திரன் - அதிமுக

  • 2021 - கு.சின்னப்பா - மதிமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை

  • ஆண்கள் - 1,29,521

  • பெண்கள் - 1,31,624

  • மூன்றாம் பாலினத்தவர் - 16

  • மொத்தம் - 2,61,161

அரியலூர் தொகுதியில் அரியாசனம் யாருக்கு?
மொடக்குறிச்சி தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in