

சென்னை: சிறுமிகள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணியை 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் 84 வயது முதியவர் ஒருவர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பான வீடியோ காவல் துறையினருக்கு கிடைத்தது. இதுகுறித்து சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த அக்டோபரில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதுதொடர்பாக பிரபல ஜெம் கிரானைட்ஸ் நிறுவன அதிபர் வீரமணி (84) மற்றும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரை போலீஸார் கடந்த மாதம் 28-ம் தேதி கைது செய்தனர். இந்த விவகாரத்தில் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல தொழிலதிபர்களுக்கு இதில்தொடர்பு உள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் போலீஸாரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரமணியை போலீஸார் 3 நாள் காவலில் எடுத்து தற்போது விசாரித்து வருகின்றனர்.