

திருநெல்வேலி: நாங்குநேரியில் சொத்து பிரச்சினையில் தாத்தாவை வெட்டிக் கொலை செய்த பேரனை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் தளவாய் (75). இவருக்கு சுப்புலட்சுமி உள்ளிட்ட 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சுப்புலட்சுமியின் கணவர் ஆறுமுகம் திருநெல்வேலி மாநகர காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு கிருஷ்ணராஜா (27) உள்ளிட்ட 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
சுப்புலட்சுமிக்கு தளவாய் அதிக அளவில் நகைகள் போட்டு திருமணம் செய்து கொடுத்ததாகவும், இதனால் மற்ற இரு மகள்களுக்கும் அவரது சொத்தை பிரித்து கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கிருஷ்ணராஜா தனது தாத்தாவிடம் சொத்து கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று அதிகாலை பால் வாங்குவதற்காக தளவாய் சென்றபோது, அவரை, கிருஷ்ணராஜா அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தளவாய் உயிரிழந்தார்.
நாங்குநேரி போலீஸார் விசாரணை நடத்தி கிருஷ்ணராஜாவை கைது செய்தனர்.