

சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் மாளிகை வாயிலில் வரவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி.
சென்னை / மதுரை / புதுச்சேரி: சென்னைக்கு நேற்று இரவு வந்த பிரதமர் மோடிக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், கிண்டி ஆளுநர் மாளிகை சென்ற பிரதமரை, ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார். இரவு ஆளுநர் மாளிகையிலேயே பிரதமர் தங்கி ஓய்வெடுத்தார். மேலும், விமான நிலையம் முதல் ஆளுநர் மாளிகை வரையிலான சாலையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 10.20 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார்
இன்று காலை 11.30 மணிக்கு புதுச்சேரியில் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத் திடலில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவரை, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
ஸ்ரீஅரவிந்தரின் 150-வது பிறந்த ஆண்டை நினைவு கூரும் வகையில், புதுச்சேரி ஆரோவில்லில் நடைபெறும் உலகளாவிய ஆன்மிக மகோத்சவத்தை விழா மேடையில் இருந்தபடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார். இந்த மகோத்சவத்தில், ஆன்மிகத் தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 புகழ்பெற்ற பேச்சாளர்கள், 400-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், விழா நடைபெறும் பகுதியில் டிஜிபி ஷாலினி சிங் நேற்று ஆய்வு மேற்கொண்டார். விழா நடக்கும் ஹெலிபேடு மைதானம் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. புதுச்சேரி நகரின் பகுதியின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி நிகழ்ச்சிக்குப் பின்னர் பிற்பகல் 2.45 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர், மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். பின்னர், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக 150 ஏக்கர் பரப்பில் பொதுக்கூட்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கோட்டை போன்ற நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் வருகையை முன்னிட்டு,சென்னை, புதுச்சேரி, மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.