

சென்னை: சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் இளநிலை படிப்புகளில் சேரும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்விக் கட்டணத் தொகையை அரசே வழங்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறுபான்மையின மக்கள் அதிகமாக வசிக்கும் 10 மாவட்டங்களில் ரூ.4.45 கோடியில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் பணியிடங்கள் புதிதாகத் தோற்றுவிக்கப்படும்.
முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் கட்டிடங்கள் கட்ட வட்டியில்லாக் கடன் வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.100 கோடி சுழல் நிதி ஒதுக்கப்படும். மேலும், தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு வழங்கப்படும் மானியம் ரூ.5 கோடியாக உயர்த்தப்படுவதுடன், அதன் தலைமை அலுவலகத்துக்கு ரூ.40 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.