மாநில நிதி சீர்கேட்டை சரிசெய்ய அரசு தீவிரம்

மாநில நிதி சீர்கேட்டை சரிசெய்ய அரசு தீவிரம்
Updated on
1 min read

சென்னை: மாநிலத்தின் நிதிநிலை மோசமாக இருப்பதாகவும், அதை சரிசெய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தின் நிதிநிலைமை மோசமான சீர்கேட்டை சந்தித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கடன் அளவு இருமடங்காக உயர்ந்து, ரூ.10 லட்சம் கோடி என்ற அளவை எட்டியுள்ளது.

இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28.3 சதவீதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் ஒவ்வொரு தனிநபர் மீதும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கடன் சுமை உள்ளது.

அதேபோல், 2024-25-ம் நிதியாண்டில் ரூ.48,840 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 2025-26-ல் ரூ.78,324 கோடியாக ஒரே ஆண்டில் உயர்ந்தது. இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2 சதவீதமாக உள்ளது. இதனால் மொத்த வருவாய்களில் சுமார் 23 சதவீதம் வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.

மேலும், வருவாய் இழப்புகள் மற்றும் வரி வசூல் துறைகளில் நிலவும் திட்டமிட்ட ஊழல் காரணமாக, 2021-22-ம் நிதியாண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.93 சதவீதமாக இருந்த வரி வருவாய், 2025-26-ம் நிதியாண்டில் 5.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அரசுக்கு நியாயமாக சேர வேண்டிய வருவாயை கருவூலத்துக்கு முறையாக கொண்டுவர இந்த அரசு ஏற்கெனவே ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

மதுபான உற்பத்தியாளர்களுக்கான கூடுதல் சிறப்புக் கட்டணம் சமீபத்தில் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஓராண்டில் ஆயிரம் கோடி ரூபாய் வரை வரவு எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குறுதி நிறைவேற்றப்படும்

வருவாய் வரவுகள், அரசுப் பணிகள் மற்றும் இதர செலவினங்களில் ஏற்படும் இழப்புகளையும் முழுமையாக தடுத்து, நிதிநிலையை மீண்டும் சீரான பாதைக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இந்த அரசு முழுமையாக நிறைவேற்றும்.

மிகவும் சவாலான நிதி நெருக்கடியை சந்தித்துவரும் சூழலிலும், முதல்வர் விஜய் பொறுப்பேற்றவுடன் 200 யூனிட் இலவச மின்சாரம், போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் படை மற்றும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கம் ஆகிய 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாநில நிதி சீர்கேட்டை சரிசெய்ய அரசு தீவிரம்
தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடுவதில் முரண் இல்லை: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in