

சென்னை: ‘மார்ச் இறுதிக்குள் பணியில் இணைந்தால் மட்டுமே 2 ஆண்டுகள் முடிவில் நீட் தேர்வில் பங்கேற்க முடியும் என்பதால், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதி பெற்று 751 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்’ என்று அரசு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளுக்கு 1,100 உதவி மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கு கடந்த ஜன.25-ம் தேதி நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 20 ஆயிரம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 1,071 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களில் 100 பேருக்கு பணி நியமன ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 13-ம் தேதி வழங்கினார். அடுத்த நாள் 220 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. காலிப்பணியிடங்கள் இல்லாததால் மீதமுள்ள 751 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.அகிலன் கூறியதாவது: சுகாதாரத்துறையில் மருத்துவர் காலிப்பணியிடங்கள் இல்லாததால், 3 மாதம் கழித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு...
அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு எழுத 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்.
மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு பணியில் இணைந்தால் மட்டுமே, காலவிரயமின்றி 2 ஆண்டுகள் முடிவில் நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியும்,எனவே, தேர்வு செய்யப்பட்டு காத்திருக்கும் மருத்துவர்களின் எதிர்காலம் கருதி, அரசு சேவை சாரா மருத்துவர்களை பிணைக்காலப் பணியில் இருந்து விடுவித்து, அந்த பணியிடங்களில் அரசு பணிக்காக காத்திருக்கும் மருத்துவர்களுக்கு, தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.