

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அனுமதியளித்த விவகாரத்தில் ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெறப்பட்டுள்ள புகார்கள் மீது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை என்று அரசு தரப்பி்ல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஆளுநரின் அதிகாரத்தை தாடி, மீசை என திமுக ஒப்பீடு செய்ததாக குறிப்பிட்டு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் கருத்து தெரிவித்தார்.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டிடிசிபி உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவ
தாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக தனியார் பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரான பி.டி.அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அன்பில் மகேஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக நேற்று நடந்தது.
அப்போது அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், “ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் அரசுத் துறை செயலரின் அனுமதியுடன் அன்பில் மகேஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
அதற்கு நீதிபதி, ஓ.. ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேசத் தொடங்கியது, ஆளுநரின் அதிகாரத்தை தாடி, மீசை என ஒப்பீடு செய்தல்லவா பேசியிருக்கிறது என்றார்.
மேலும், நான் ஏற்கெனவே அன்பில் மகேஸுக்கு முன்ஜாமீன் கோரி எப்போது தாக்கல் செய்யப் போகிறீர்கள் என்றார். அதற்கு நாளை (இன்று) மனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும், ரத்து செய்யக் கோரும் இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென்றும் அன்பில் மகேஸ் தரப்பில் கோரப்பட்டது.
இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில் கூறியிருந்ததாவது: ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் வசூலிக்கப்பட்டு மோசடி செய்ததாக இதுவரை 177 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
‘கட்சி நிதி’ என்ற பெயரில் பணம் வசூலித்துள்ளனர். மேலும் வழக்குப் பதிவு செய்ய ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை. அரசுத் துறைச்செயலரின் ஒப்புதலே போதுமானது. விசாரணையை முடக்கும் விதமாகவே இந்த மனுவைதாக்கல் செய்துள்ளனர்.
அரசியல் காரணங்களுக்காக தனியார் பள்ளி நிர்வாகிகளை அச்சுறுத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. எனவே அன்பில் மகேஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் அக்.29-க்கு தள்ளி வைத்துள்ளார்.