போட்டி அரசாங்கம் நடத்த ஆளுநர் முயற்சி: இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்

Updated on
1 min read

சென்னை: “மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆளுநர் மாளிகையை அணுகலாம் என்று ஆளுநர் பேசியிருப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாகும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நேற்றைய தினம் (04.07.2026) ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பொழுது, மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆளுநர் மாளிகையை அணுகலாம். அவர்களது கோரிக்கைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம் என பேசியிருப்பதும், சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை கண்டறிந்து, அவற்றை சரி செய்ய முயற்சி செய்பவர்கள் தங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் ஆளுநர் மாளிகையில் முறையிடலாம் என்று பேசியிருப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாகும்.

ஆளுநரின் இந்த செயல் மாநில அரசின் நிர்வாகத்தில் நேரடியாக தலையிடும் அதிகார அத்துமீறலாகும். ஆளுநரின் அதிகார அத்துமீறல் நடவடிக்கையை தமிழ்நாடு அரசும், முதல்வரும் தடுத்து நிறுத்த உடனடியாக, சட்ட நடவடிக்கைகளையும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் .

கடந்த காலத்தில், தமிழ்நாடு அரசு நடத்திய சட்டப் போராட்டத்தில் ஆளுநர் அதிகாரம் குறித்து தெளிவாகவும், திட்டவட்டமாகவும் வரையறுத்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புப் சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகார எல்லையினையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் மதிக்காமல் செயல்படும் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரின் அத்துமீறலை தடுத்து நிறுத்த, குடியரசுத் தலைவர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்</p></div>
“முருகப் பெருமான் வடநாட்டில் பிறந்தார் என கட்டுக்கதை” - ஜூனியர் என்டிஆர் படத்துக்கு சீமான் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in