

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் முதல் கூட்டம் மே 11 முதல் 13-ம் தேதி வரை மற்றும் ஜூன் 18 முதல் 23-ம் தேதி வரையும், 2-வது கூட்டம் கடந்த ஆக.5 முதல் செப்.8-ம் தேதி வரையும் நடைபெற்றது.
இதில் விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்தல், புதிய தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தல், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்தச் சட்டம்,
டாஸ்மாக் மதுபானங்களுக்கு மதிப்புக்கூட்டு வரி, தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம், நகர் ஊரமைப்பு மற்றும் திட்டமிடல் திருத்தச் சட்டம், எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குதல் உட்பட 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இவற்றில் 12 மசோதாக்களுக்கு கூட்டத்தொடர் முடிந்த 5 நாட்களுக்குள்ளாகவே ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் குறித்த மசோதா மட்டும் இறுதி முடிவுக்காக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல் அளிக்கப்பட்ட 12 மசோதாக்கள், தற்போது சட்டங்களாகி விட்டன. அவை அனைத்தும் தமிழக அரசிதழில் செப்.15-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன.