

கோப்புப் படம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களைக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்தது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருங்கல் அருகே செல்லங்கோணம் அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு, தலைமை ஆசிரியை தனது கால்களை மசாஜ் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாகவும் புகார் எழுந்தது.
இதுபற்றி தெரியவந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியையிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த ஆசிரியை முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறுவதும், பின்னர் அவர் வருத்தம் தெரிவிப்பதும் தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
இதுதொடர்பாக பெற்றோர் ஒன்றிணைந்து, பள்ளி கல்வித்துறைக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதை யடுத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் நேற்று, செல்லக்கோணம் அரசு தொடக்கப் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். புகார் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.